வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றையதினம் காலை எட்டு மணிக்கு காணிகளை சுவீகரிப்பதற்க்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாது கடற்படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அளவீட்டு முயற்சிகள் தடுக்கப்பட்டது. காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாம் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும் அதனையே அளவீடு செய்ய வந்திருப்பதாக நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்ததோடு காணிகளை வழங்க முன்வந்தவர்கள் என தென்பகுதியை சேர்ந்த மூன்று காணி உரிமையாளர்களும் அவ்வேளையில் பிரசன்னமாகியிருந்தனர்.
இருந்த போதிலும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்த போதிலும் ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை .
அவ்வாறு 15 பேர் காணி வழங்க முன் வந்திருப்பின் அதே பகுதியில் எமது காணிகளும் கடற்படையதினரால் வேலி போட்டு மறித்து அடைக்கப்பட்டுள்ளது எனவே கடற்படைமுகாமுக்கு காணி வழங்க முன்வந்தவர்களுக்கு காணிகளை அளவீடு செய்து வழங்கும் முன் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள எமக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தி அளவீடு செய்து எமக்கு வழங்கிவிட்டு கடற்படை முகாமுக்கு காணி வழங்க முன் வந்தவர்களின் காணிகளை அளவீடு செய்யுமாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நில அளவையாளரிடம் தெரிவித்ததோடு இதற்கான கோரிக்கை கடிதத்தையும் கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
நில அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்ட போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் பொதுமக்களை தள்ளி மற்றும் இழுத்துவிழுத்தி இடையூறுகளை ஏற்படுத்தியதோடு புலனாய்வாளர்கள் , கடற்படையினர் மற்றும் தென்பகுதியிலிருந்து வருகைதந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் காணி உரிமையாளர்களுடன் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன் ,க.தவராசா வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவருமான ச.சஜீவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக செயப்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
Reviewed by Author
on
June 08, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment