கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழிற்சந்தை.
முன்னணி நிறுவனமான Sri Lanka Association for Software Services Companies - SLASSCOM இன் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் அனுசரணையுடன் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழிற்சந்தை இன்று நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர். அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கணகசிங்கம் அதியாகவும், SLASSCOM நிறுவன தலைவர் ஆஷிக் அலி சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொண்டனர்.
அங்குராப்பண நிகழ்வு, தொழில் வழிகாட்டல் நிகழ்வு மற்றும் தொழிற் சந்தை என மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இத்தொழிற்சந்தையில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கலை கலாசாரம், வர்த்தக முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் திருகோணமலை வளாகத்தின் பிரயோக விஞ்ஞானம், தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்விப் பீடங்களைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் அத்துடன் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
அங்குராப்பண மற்றும் தொழில் வழிகாட்டல் அமர்வுகள் காலை நேர நிகழ்வாக கலை கலாசார பீட கேட்போர் கூடத்திலும் தொழிற்சந்தை மாலை நேர நிகழ்வாக நல்லையா கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது. இதன்போது பிரதி உபவேந்தர் பேராசிரியர். கருணாகரன், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி. ஜெயராஜா, தொழிநுட்ப பீட பீடாதிபதி கலாநிதி. மதிவேந்தன், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி. குணபாலசிங்கம், பதிவாளர் பகிரதன் மற்றும் பல்கலைக்கழக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு பணிப்பாளர் மற்றும் அதன் விரிவுரையாளர்கள் அத்துடன் பீடங்களின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
உபவேந்தர் பேராசிரியர் வ.கணகசிங்கம் ஆரம்பித்து வைத்த தொழிற்சந்தையில், இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தன. இக்கூடங்களில் மாணவர்களுக்கான உடனடி நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டதுடன் இளம் பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டதுடன், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
மேலும், இளம் பட்டதாரிகள் பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்திசெய்து கொண்டதோடு எவ்வாறு தொழில் உலகிற்கு பிரவேசிப்பது என்பது தொடர்பான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கியதுடன், இளம் பட்டாதரிகள் மற்றும் பட்டதாரிகளின் சுயவிபர தரவுகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில்வாய்ப்பு தளங்கள் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழிற்சந்தை.
Reviewed by Author
on
May 30, 2023
Rating:

No comments:
Post a Comment