புலனாய்வுப் பிரிவினைக் கொண்டு மக்களை நசுக்க வேண்டாம் : ஜனநாயக அமைப்பு!
அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுக்க வேண்டாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்தார்
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகளை அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து அவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடருகின்ற பொலிசாரின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற பொலிசாரின் திட்டமிட்ட அத்துமீறல்களை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
தேர்தல் கடமைகளுக்கு செல்லுகின்ற அனைத்து பொலிசாரும் தங்களுடைய பொலிஸ் உடையை அணிந்துதான் செல்லுகின்றார்கள்.
ஆகவே இங்கு எதற்காக சிவிலுடையில் செல்லவேண்டும். இங்கே புலனாய்வாளார்கள் யாரை புலனாய்வு செய்கின்றார்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை அச்சுறுத்தவே புலனாய்வாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றார்கள்.
ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த புலனாய்வாளர்கள் ஏவிவிடப்படுகின்றார்கள். எங்களுடைய மக்களையும் அதிகமான பணத்தினை வழங்கி புலனாய்வாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
மக்கள்சார் சிவில் அமைப்புகளை அச்சுறுத்தாதீர்கள். தமிழ் மக்களினுடைய இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள்.
மக்களினுடைய நல்வாழ்வு சார்ந்த எந்த ஒரு அமைப்பினையும் அச்சுறுத்த வேண்டாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment