இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!
நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான விசேட மாநாடொன்று கடந்த புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றின் பிரத்யேக கூடத்தில் நடைபெற்றது.
பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் தேசிய அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி பற்றிக் லூயிஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணியும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளருமான ஜனனி ஆகியோர் விசேட உரையாற்றினர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கரெத் தோமஸ், சாம் டெரி, சாரா ஜோன்ஸ், எட் டேவி, விரேந்திர ஷர்மா, ஜோன் மெக்டொனால்ட் ஆகியோர் உள்ளடங்கலாக அந்நாட்டு அரசியல்வாதிகளும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும், தமிழ் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வேலன் சுவாமிகள், சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் செயற்பாட்டாளர் ஜனனி ஆகியோர் வடக்கு- கிழக்கில் தொடர்ந்து இனவழிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் 4 படிமுறைகள் தொடர்பாகவும், அதற்குரிய தீர்வை சர்வதேச மட்டத்தில் அணுகுவதற்கான வாய்ப்பு குறித்தும் இவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இம்மாநாட்டில் உரையாற்றிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் விளைவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதேநேரம் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment