டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஜூலை 25 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மனு இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அகற்றுமாறு செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத்தினால் 2022 நவம்பர் 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், அத்தகைய நபர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவித்து, அதனை இரத்துச் செய்வதற்கான ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் ஓஷல ஹேரத் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments:
Post a Comment