முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் ஆரம்பம்.
நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமையப்பெற்றுள்ள மத்திய பேருந்து நிலையத்தின் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும் இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டட தொகுதியானது மீள்திருத்தம் செய்யப்பட்டு சில வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நூறு வீதம் வேலைகள் பூர்த்தியடையாத நிலையில் பேச்சுவார்த்தை ஒன்றின் ஊடாக ஆறு மாத காலப்பகுதிக்குள் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்து தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில்
தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றையதினம் (24.10.2023) மத்திய பேருந்து நிலைய கட்டடத்தொகுதியில் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகதாசன், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் பிரதிநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் , தனியார் பேருந்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நாடா வெட்டி பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்து பேருந்தில் சென்று பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இ.போ.ச பேருந்தினர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஒன்றிணைந்த நேர அட்டவணையை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளையதினம் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் அரச பேருந்து சேவையும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.
குறித்த மத்திய பேருந்து நிலையமானது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த
கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்களால் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த போதும் வேலைகள் முழுமைபெறாமையால் பேருந்து சேவையை தம்மால் நடத்த முடியாது என பேருந்து சங்கத்தினர் தெரிவித்து புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் ஆரம்பம்.
Reviewed by Author
on
October 24, 2023
Rating:

No comments:
Post a Comment