வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் நேற்றயதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களிற்கான நிரந்தர கிராம சேவையாளரை நியமிக்க கோரி கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பிரதேச செயலக பிரதான வாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களையும் வெளியேற விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன்,
பின்னர் பிரதேச செயலக அலுவலகத்தினுள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தனிநபர் ஒருவரினால் அப்பகுதியில் உள்ள சிலரின் காணிகளை அபகரித்து கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக பார்வையிட கடந்த 12ம் திகதி கிராமசேவையாளர் அப்பகுதிக்கு சென்ற போது அவரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்திருந்தமையால் அவ்விடத்தில் இருந்து கிராம சேவையாளர் அகன்று சென்றுள்ளார்.
மேலும் 2010ம் ஆண்டு 10ம் மாதம் 21ம் திகதி எங்களை மீள்குடியேற்றம் செய்திருந்தனர். அன்று தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய 09 கிராம சேவயாளர்களும் குறித்த நபரினால் ஏற்பட்ட இடையூறு காரணமாக தங்களால் கடமையாற்ற முடியாது என்று தெரிவித்து விலகிச்சென்றுள்ளனர்.
இதன் காரணமாக நாம் எல்லோரும் கூடி எமக்கான நிரந்தர கிராம சேவையாளர் வேண்டும் என்றும் குறித்த தனிநபரின் அட்டூழியம் நிறைவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்தியே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்,
எமது பிரதேச செயலக பிரிவின் கீழ் 48 கிராம சேவகர் பிரிவில் 28 கிராம சேவகர்களே உள்ளனர். இதனால் ஒரு கிராம சேவகரிற்கு நிரந்தர கிராம சேவகர் பிரிவும், பதில் கடமை பரிவும் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் கிராம சேவையளர் சர்வேந்திரன் பம்பைமடுவில் பதில் கடமையும் வேலங்குளம் கிராம சேவகர் பிரிவில் பதில் கடமையையும் மேற்கொண்டிருந்தார்.
மேலும் வேலங்குளம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக குறித்த கிராம சேவகரினை வேலங்குளம் கிரம சேவகர் பிரிவிற்கு நிரந்தரமாக நியமிக்கிறோம். அதன் பின்னர் அவருடைய கடமைக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதற்கு பிரதேச செயலகம் பூரன ஆதரவை வழங்கும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களிடம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
October 24, 2023
Rating:

No comments:
Post a Comment