மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கான ஆவணம் கையளிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு-திருப்பி அனுப்பப்பட்ட திணைக்கள அதிகாரிகள்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையன் குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான ஆவணம் சட்டபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை (8) காலை குறித்த பிரதேசத்தில் இடம் பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகை தந்த திணைக்கள தலைவர்கள் அடங்கிய குழுவை திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையன் குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான ஆவணம் சட்டபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கைக்காக இன்று புதன்கிழமை (08) மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் பெருந் தொகையான வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்தனர்.
குறித்த விடையத்திற்காக அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள் தங்கள் ஆலய மணிகளை ஒலிக்க வைத்து கிராம மக்களை ஒன்று திரட்டி வருகை தந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது பாதைக்கு குறுக்கே மரங்களை போட்டு தடை செய்தனர்.
அத்துடன் இச் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழுவினர், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் திடீர் என படையெடுத்து வந்த தன் நோக்கத்தை கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்கான அனுமதியை வழங்கும் நோக்குடனே இக்குழுவினர் வந்திருந்தமை யை அறிந்ததும் மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலைகளால் இப்பிரதேசம் எதிர் கொண்டு வரும் பாதிப்புகளை தெளிவாக வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை செல்ல விடாது பாதையை மறித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகளின் தலைமையில் குறித்த குழுவினர் வருகை தந்த நிலையில் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கான ஆவணம் கையளிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு-திருப்பி அனுப்பப்பட்ட திணைக்கள அதிகாரிகள்.
Reviewed by Author
on
November 08, 2023
Rating:

No comments:
Post a Comment