மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் நிரந்தரமான வருமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான
கூட்டு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் தெரிவித்தார்.
மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய ராச்சியத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று (20) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் ,துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு கூட்டு முயற்சியான தொழில் நடவடிக்கைகளை எவ்வாறு ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் நவீன தொழில்நுட்பத்தை எவ்வாறு இதனூடாக பயன்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இவர்களுக்கான வாழ்வாதார வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மன்னார் நலன்புரிச்சங்கம் மன்னார் மாவட்டத்தில் கல்வி,மருத்துவம்,விளையாட்டுத் துறை உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில்,இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,குறித்த செயல் திட்டத்தை -மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய ராச்சியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் நிரந்தரமான வருமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாக இக்கலந்துரையாடலில் முன்னெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment