அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொள்ளும் அரசின் இன,மத ரீதியான அடக்குமுறை, நில ஆக்கிரமிப்பு, இராணுவ மயமாக்கல் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவர அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் .

 வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும்  ,இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டிணைவில் கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது.

 

வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்றலில் இருந்து இருந்து பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து விழிப்புணர்வு பேரணியாக கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தை சென்றடைந்துள்ளனர்.


பேரணியின் முடிவில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,



இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் பெண்கள் எதிர் கொண்டு வரும் பன்முகப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக கூட்டாக குரல் கொடுப்பதற்காக வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களான நாம் இங்கு ஓரணி திரண்டிருக்கிறோம்.


இலங்கையின் அனைத்து பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளை கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவரும் உள்ளாகின்றனர். பெண்கள் மீதான வன்முறை கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் மோசமடைந்துள்ளது. இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.


எனினும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்ட தமிழ் பேசும் பெண்களான நாம் குறிப்பான பன்முகப்பட்ட அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகிறோம்:


1) இலங்கை அரசின் திட்டமிட்ட இன மற்றும் மொழி ரீதியான அடக்குமுறைகளுக்கு எழுவது வருடங்களுக்கு மேலாக உள்ளாகி வருகிறோம்.


2) முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இன அழிப்புப் போரின் அழிவுகளையும் வலிகளையும் சுமந்துகொண்டு இருக்கிறோம்.


3) இன்றுவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்ப் பெண்கள் எனும் காரணத்தாலேயே எமது சசோதரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். தாய்மாராகவும், மனைவி மாராகவும், சகோதரிகளாகவும் எமது குடும்ப அங்கத்தவரின் பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் மனப் பதைப்புடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்


4) உண்மையை அறிந்து கொள்ளவும், நீதிக்காகவும், நியாயமான இழப்பீடு களைப் பெறவும், எமது உறவுகளுக்காக நினைவேந்தலைகளை மேற்கொள்ளவும், கௌரவாமான அரசியல் உரிமைகளைக் கொண்ட பிரஜைகளாக வாழவும் குரல் கொடுத்து வருகிறோம்


5) இலங்கை அரசானது இதுவரை பொறுப்புக்கூறலை புறக்கணித்து வருவதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எனும் வகையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வருகிறோம்


6) எமது சகோதரிகள் பலரும் அரசின் திட்டமிட்ட காணி அபகரிப்பு காரணமாக இன்று வரையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். அரச திணைக்களங்களான வன இலாகா, தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றினால் எதேச்சாதிகாரமாக காணிகள் அபகரிக்கப்படுதல், அரச படைகளால் காணிகள் அபகரிக்கப்படுதல் காரணமாக வீடுகளையும் விவசாய நிலங்களையும் இழந்து பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பொருளாதாரத்தை இழந்துள்ளனர்


7) அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கம் காரணமாக அச்சுறுத்தல்களையும் அவமானப்படுத்தல் களையும் எதிர்கொண்டு வருகின்றனர்


8) ராணுவ மயமாக்கப்பட்ட பிரதேசத்து பெண்கள் எனும் வகையில் பொதுவில் பெண்கள் அனைவரும் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்


9) வடக்கு கிழக்கில் பெண்களின் சுயாதீனமான சமூக நடவடிக்கைகள் அனைத்தும் அரச உளவுப் பிரிவின் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும் அத்துமீறல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். உம்: ஆண் உளவாளிகள் பெண்களை புகைப்படம் எடுத்தல், பெண்களை விசாரித்தல் எனும் பெயரில் மாலை நேரங்களில் வீடுகளுக்கு செல்லுதல், இரவிலும் தொலைபேசியில் அழைத்தல். சமூக செயற்பாட்டில் உள்ள பெண்கள் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்படல், பெண்களின் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்துவதற்காக பெண்கள் மீது பொலிசார் காரணமற்று வழக்கு தொடுத்தல் போன்றவற்றைக் கூற முடியும்.


10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்து பெண்கள் பாதுகாப்புத் தரப்பினால் அச்சுறுத்தப்படல், தொடர்கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படல், தாக்கப்படல் நடைபெறுகிறது


அரசின் இனவாத அடக்குமுறைகளால் மாத்திரமன்று, வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலங்காலமாக நிலவிவரும் ஆணாதிக்க அடக்குமுறை போனதும் உரிமை மறுப்புகளினதும் காரணமாகவும் தமிழ்ப் பெண்களான நாம் பாதிக்கப்படுகிறோம். குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், இணையதள ரீதியான குற்றங்கள் ஆகியன தமிழ் சமூகத்தைச் சார்ந்த ஆண்களால் தமது  சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு  எதிராகவும் சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு  எதிராகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாடசாலைகளில் சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன. தொழில் பாதுகாப்பு காரணமாக வேலைத்தள வன்முறைகளை பெண்கள் வெளிக்கொண்டு வராமல் உள்ளனர்.


இது மாத்திரமன்றி தமிழ் சமூகத்தில் காணப்படும் சாதிய, பிரதேச வேறுபாடுகள், மத ரீதியான பிரிவினைகள் யாவும் பெண்களையே அதிகம் பாதிக்கின்றன. இவற்றுடன் தமிழ் சமூகத்தில் நிலவும் ஜனநாயக மறுப்பு சிந்தனைகள், பிற்போக்கான கலாச்சார அடக்குமுறைகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன.


இந்நிலையில்,

• வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும், நில ஆக்கிரமிப்பையும், இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை கோருகிறோம்


• வடக்கு கிழக்கில் சட்ட ஒழுங்கு உரிய முறையில் அமுலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்


• ஒட்டுமொத்த இலங்கைப் பெண்களும் சுதந்திரமாகவும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோருகிறோம்


• பாதிக்கப்படும் பெண்களின் நலனை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகளும், காவல்துறையும் பக்கச்சார்பின்றி செயலாற்றக் கோருகிறோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொள்ளும் அரசின் இன,மத ரீதியான அடக்குமுறை, நில ஆக்கிரமிப்பு, இராணுவ மயமாக்கல் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவர அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் . Reviewed by Author on March 12, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.