அண்மைய செய்திகள்

recent
-

கட்டுக்கரை குளத்தில் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

 கட்டுக்கரை  குளத்தில் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்-   கட்டுக்கரை குள  திட்டமிடல் முகாமைத்துவ குழுவின்  தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா


(30-04-2024)

கட்டுக்கரை  குளத்தில் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.குள படுக்கையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதனால் மாவட்டத்தின் சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு,மழைவீழ்ச்சியும் குறைவடைகின்றது .எனவே இக் காணிகளை மீட்டுக் கொள்ள அனைத்து திணைக்களங்களும், மாவட்டத்தில் உள்ள பொது நிறுவனங்களும் இணைந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என  கட்டுக்கரை குள  திட்டமிடல் முகாமைத்துவ குழுவின்  தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா தெரிவித்தார்.

மன்னார் மெசிடோ நிறுவனம் ஏற்பாடு செய்த விசேட ஊடக சந்திப்பு இன்று (30) செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாரில் இடம் பெற்றது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார்-கட்டுக்கரை குளத்தின் கீழ் தற்போது 31 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குறித்த விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டம் குறித்த குளத்தின் கீழ் உள்ள காணிகளுக்கு போதுமானதாக காணப்படவில்லை.

எனவே இக் குளத்தை விஸ்தரிப்பதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1899 ஆம் ஆண்டு இக்குளத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் இக் குளத்தின் மேல் இருந்த 28 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு இக் குளத்திற்கு 10 ஆயிரம் ஏக்கர் காணி பறவைகள் சரணாலயம் ஆகவும்,இக்குளத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது.

 ஆனால் இக்குளத்தின் மேல் ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது 1500 ஏக்கருக்கு   மேற்பட்ட காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டுக்கரை குளத்தின் நீர் பாசன சேவைகள் பாதிக்கப்படுகின்றது.மேலும் இக் குளத்தின் மேல் காணிகளை அடாத்தாக பிடித்தவர்கள் குறிப்பாக சுமார் 25 முதல் 30 பேர் வரை இக்காணிகளை அடாத்தாக பிடித்துள்ளனர்.இதுவரை காணிகளை அடாத்தாக பிடித்தவர்களுக்கு எதிராக எந்த திணைக்களங்களும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.நாங்கள் உரிய திணைக்களங்களிடம் முறைப்பாடு செய்தும் முறைப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இக்குளத்தை 1932 ஆம் ஆண்டு நில அளவை செய்து 1954 ஆம் ஆண்டு இதில் ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் காணியும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அதற்குள் காணிகளை பிடித்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.அதே வேளை வன வள பரிபாலகர் திணைக்களம்,எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொடர்ந்து இக்குளத்தில் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.குள படுக்கையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதனால் மாவட்டத்தின் சூழல் பாதிப்பு ஏற்படவதோடு,மழைவீழ்ச்சியும் குறைவடைகின்றது.வெப்பம் அதிகரிக்கிறது.எனவே இக் காணிகளை மீட்டுக் கொள்ள அனைத்து திணைக்களங்களும்,மாவட்டத்தில் உள்ள பொது நிறுவனங்களும் இணைந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.விவசாயிகள் சார்பாக குறித்த கோரிக்கையை முன் வைக்கின்றோம்.என தெரிவித்தார்.


  ரீ.தாசீஸ்-இரட்டை குளம் வாய்க்கால் விவசாய அமைப்பின்  செயலாளர்

செட்டியார் கட்டையடம்பன் பிரதேசத்தில் அடாத்தாக நீர் பாய்ச்சும் பிரதேசம் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து சட்ட விரோதமாக நீரை எதிர் பக்கமாக திசை திருப்புகின்றனர்.கட்டுக்கரை குளம் கட்டப்பட்டு 1932 ஆம் ஆண்டிற்கான நில அளவை வரை படத்திற்கு அமைவாக கட்டுக்கரை குளம்,வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்பு திணைக்களம்,பறவைகள் சரணாலயம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டது..

ஆனால் 1500 ஏக்கர் இவ்வாறு பிடிக்கப்படவில்லை.அதில் இருந்த குடும்பங்கள் சில நூறு ஏக்கர் காணிகளில் மாத்திரம் விவசாயம் செய்தார்கள்.இதனால் நீர் பிரச்சினை தெரியவில்லை.கட்டுக்கரை குளம் கட்டப்பட்டு சுமார் 124 ஆண்டுகளின் பின்னர் 1500 ஏக்கராக அதிகரித்ததன் பின்னர் சனத்தொகையும் அதிகரித்துள்ளமையினால் எங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எமக்கு வருகின்ற நீரையும் மறித்து அவர்கள் திசை திருப்பிக் கொண்டு செல்கின்றனர்.இந்த மக்கள் தாங்கள் ஏற்கனவே பிடித்த காணிகளை விற்று விட்டு,புதிய காணிகளை பிடித்து திருத்திக் கொண்டு செல்கின்றனர்.இதனால் எமது நீர் அந்த காணிகளுக்கும் செல்கிறது.இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நாங்கள் பல தடவை சகல  அதிகாரிகளுக்கும் எழுத்தில் வழங்கினோம்.எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.2017 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு சகல அமைப்புக்களும் கையொப்பமிட்டு மகஜர் கையளித்தோம்.ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.எமக்கு தவறான பதில்கள் கிடைத்தது.

இந்த பிரச்சினை யை அதிகாரிகள் மட்டத்தில் வைத்திருந்தால் எவ்வித பலனும் கிடைக்காது என்ற காரணத்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி வழக்கு தாக்கல் செய்ய கட்டுக்கரை திட்ட குழு சார்பாக நடவடிக்கை முன்னெடுத்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் விவசாயம்  செய்கின்ற மக்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை.

நான்கு திணைக்களங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.குறித்த காணிகள் நான்கு திணைக்களங்களின் பொறுப்பில் உள்ள காணி.அந்த திணைக்களங்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

பறவைகள் சரணாலயத்தை பொறுத்தவரையில் குறித்த திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அவர்கள் பராமரிக்க முயலவில்லை.மாறாக அதனை விடுத்து மாவட்டத்தில் பல புதிய இடங்களை அவர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.எனவே இவ்விடத்தில் அனைத்து அதிகாரி களினதும் ஒத்துழைப்பு எமக்கு தேவை.

ஏ.எச்.எம்.நிஹார்-நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்.

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.எமக்கு உரிய மேய்ச்சல் நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திணைக்கள தலைவர்கள்,உயர் அதிகாரிகள்,அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து கலந்துரையாடினோம்.சுமார் 07 வருடங்களாக மேய்ச்சல் தரை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியும் இதுவரை எங்களுக்கு மேய்ச்சல் தரை கிடைக்கவில்லை.

கடந்த வருடம் வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உடனடியாக மேய்ச்சல் நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.ஆனால் அதற்கு இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தோம்.அதற்கும் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.

கடந்த வருடம் சுமார் 35 ஆயிரம் மாடுகள் நானாட்டான் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்த மாடுகளுக்கான மேய்ச்சல் நிலம் செட்டியார் கட்டையடம்பன் என்ற பகுதியில் உள்ள புல்லறுத்தான் கண்டல் என்ற இடம் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டு அக்காணியை மேய்ச்சல் நிலமாக ஒதுக்கீடு செய்து  பிரகடனப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த வருடம் மாந்தை மேற்கு பகுதியில் 15 ஆயிரம் மாடுகள் கொண்டு செல்லப்பட்டு அதில் சுமார் 3500 மாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது.அதற்கு எவ்வித நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.அதிகாரிகள் பார்வையிட்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

தற்போது பால் உற்பத்தியை மேற்கொள்வதிலும் பாரிய சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றோம்.மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் நிலம் இல்லாமையே காரணமாக உள்ளது.இதனால் மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை முன்னெடுப்பவர்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எனவே மாந்தை மேற்கில் அமைந்துள்ள புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் நிலமும் நானாட்டான் பிரதேசத்தில் ஆற்றுக்கு பின் பகுதியில் அமைந்துள்ள மேய்ச்சல் நிலமும் எங்களுக்கு பெற்றுத் தரப்பட வேண்டும்.என்ற கோரிக்கையை கால்நடை வளர்ப்பாளர்கள் சார்பாக முன் வைக்கிறேன்.என மேலும் தெரிவித்தார்.

கட்டுக்கரை குளத்தில் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் Reviewed by NEWMANNAR on April 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.