அண்மைய செய்திகள்

recent
-

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் மன்னாரமுது அஹ்னாஃப் பயங்கரவாத பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


 சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை அரசாங்கம் சேர்த்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் 2024 மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2387/02 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 210 நபர்கள் மற்றும் 15 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


 “காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டதும் 2023ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 2335/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின், குழுக்களின் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.” என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தன. இதற்கமைய, கடந்த வருடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீம் உட்பட 91 பேரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.


 ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு, அஹ்னாப் ஜசீமின் பெயர் முதன்முறையாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது.


 எந்த காரணமும் கூறாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீமின் பெயரைச் சேர்த்தமையால், தொழில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையால் அவர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.


 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டிருந்தார்.



நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் மன்னாரமுது அஹ்னாஃப் பயங்கரவாத பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார் Reviewed by Author on June 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.