திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் பதவியேற்றார்
திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார்.
திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.
2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 பாராளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார்.
இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
Reviewed by Author
on
July 09, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment