அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் புரட்சியால் தனது பதவியை இராஜினாமா செய்த பங்களாதேஷ் பிரதமர்

 பங்களாதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக  பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச  செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்திருந்தது.
 
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் பங்களாதேஷ் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் மாணவர்கள் புரட்சி வெடித்தது. மாணவர்களின் இடைவிடாத போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததால் பாதுகாப்பு படையினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்க முயன்றனர். இதில் மேலும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் ரத்த வெள்ளத்தில் பங்களாதேஷ் தத்தளித்தது.

இந்த நிலையில் பங்களாதேஷ் ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.

இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாடு ஒன்றுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பங்களாதேஷ் ஊடக தகவல்களின்படி, இந்தியாவுக்கு தான் ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் தப்பியிருப்பதாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் இருவரும் தஞ்சமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மாணவர்களின் புரட்சியால் தனது பதவியை இராஜினாமா செய்த பங்களாதேஷ் பிரதமர் Reviewed by Author on August 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.