செம்மணி மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றில் வௌியான அதிர்ச்சித் தகவல்
அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம் என்றும், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் படி, பொலிஸார் குறித்த விடயத்தினை யாழ். நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு கடந்த வியாழக்கிழமை (27) நீதவான் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸார், தடயவியல் பொலிஸார், நல்லூர் பிரதேச செயலர் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தனர்.
குறித்த பகுதிகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், மீட்கப்பட்ட எலும்பு துண்டுகளை பகுப்பாய்வுக்கு அனுப்புமாறும், ஏனைய பகுதிகளை ஸ்கேனர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நீதவான் கட்டளையிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் (28) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மீட்கப்பட்ட எலும்பு துண்டு மாதிரிகள் பெரும்பலானவை மனித எலும்பு துண்டுகள் என தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நீதவான் எதிர்வரும் 04ஆம் திகதி மன்றில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு, காலநிலையையும் கருத்தில் கொண்டு ஸ்கேனிங் மூலம் அப்பகுதிகளை ஆய்வு செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என கூறியதாக கிருபாகரன் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றில் வௌியான அதிர்ச்சித் தகவல்
Reviewed by Vijithan
on
February 28, 2025
Rating:
Reviewed by Vijithan
on
February 28, 2025
Rating:


No comments:
Post a Comment