அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் தலைதூக்கும் 'சிக்குன்குனியா'

 'சிக்குன்குனியா' நோய் பரவும் அபாயம் இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். 


தற்போது நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளுக்கு பரவியுள்ள "சிக்குன்குனியா" நோய் தற்போது இலங்கையிலும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். 

தற்போது, ​​நாட்டில் 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அவற்றில் 65 பேர் மருத்துவ ரீதியாக சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதேவேளை, டெங்கு நோய் மீண்டும் பரவி வருவதன் காரணமாக இரத்தினபுரி வைத்தியசாலையில் ஊழியர்கள் 37 பேர் உள்ளடங்களாக 87 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, வைத்தியசாலை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஹொரணை - எல்லகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மலேரியா தொற்று இருப்பது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர் வசித்த பகுதியில் மலேரியா நோய் பரப்பும் நுளம்புகள் காணப்படவில்லை என்றாலும், இரண்டாம் நிலை நோய் பரப்பும் நுளம்புகள் காணப்பட்டதாக சோதனைகளை மேற்கொண்டு வரும் களுத்துறை மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, சுகாதார பிரிவு, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பிற்காக நுளம்பு வலைகளை வழங்கி வருகிறது. 

2016 ஆம் ஆண்டு இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தாண்டு இதுவரை 14 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மீண்டும் தலைதூக்கும் 'சிக்குன்குனியா' Reviewed by Vijithan on April 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.