வடக்கு கிழக்கில் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம்- பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (8) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வடக்கு கிழக்கில் எமக்கு ஆணை தந்துள்ளனர்.எதிர் வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வில்லை என்றால் மக்கள் வழங்கிய ஆணையை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற செய்தியை சொல்லியுள்ளனர்.
நாங்கள் ஒற்றுமையாக இல்லாத நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.அரசாங்கத்திற்கு கூடுதலாக மக்களின் ஆதரவு கிடைக்க பெற்றுள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.எனினும் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் ஜே.வி.பி.பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழர்களை தமிழர்கள் ஆழக்கூடிய வகையில் தமது ஆணையை வழங்கி உள்ளனர்.மேலும் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்கின்ற செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தினை பொறுத்த வகையில் அடுத்தடுத்து வருகின்ற தேர்தலாக இருக்கலாம்,போராட்டங்களாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு முயற்சியை நாம் முன்னெடுக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம்.நாங்கள் தமிழரசு கட்சியுடனும்,கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியுடனும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
எங்களுடைய முதல் ஆட்சி அமைக்கின்ற செயல்பாடுகள் தமிழ் தேசிய கட்சிகளுடன் இருக்கும்.அதனடிப்படையில் பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக ஒரே அணியாக செயல்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்.நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்குகளை வழங்கி உள்ளனர்.
மக்களின் ஆணையை உணர்ந்தவர்களாக நாங்கள் செயல்பட வேண்டும்.

No comments:
Post a Comment