அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

 2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 


குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. 

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். 

எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். 

அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு Reviewed by Vijithan on August 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.