மன்னார் மாவட்ட மீனவர்கள் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பு-கைவிடப்பட்ட நிலையில் மீனவ குடும்பங்கள்- மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவர்கள் கவலை தெரிவிப்பு.
நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்ற புயலினால் மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதும் இதுவரை யாரும் தம்மை வந்து பார்த்து தமக்கு எவ்வித உதவிகளும் வழங்க முன்வரவில்லை என மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாதிப்புகளை எதிர் கொண்டுள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள்,யாரும் வந்து தம்மை பார்த்து பாதிப்புகள் தொடர்பாக கேட்கவில்லை என்றும் எந்த ஒரு நிவாரணங்களும் தரவில்லை என்றும் புயலின் பின்னர் நாங்கள் அரசால் கைவிடப்பட்டுள்ளது போல் உணர் கிறோம் என என குறித்த மீனவர்கள் தெரிவித்தார்கள்.
.ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு சாப்பாடு. இனி ஒரு மாசத்துக்கு கடலில் தொழிலுக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.
கடந்த புயல் வெள்ளத்தின் போது எமது படகுகளை கொண்டு சென்று எத்தனை நபர்களை காப்பாற்றிய எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை.
மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆடு ,மாடு விலங்குகள் மனித உடல்கள் போன்ற கழிவுகள் எல்லாம் எமது கடல் பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.
அதனால் எமது மீனவர்கள் தொழிலுக்கு போவதில்லை .இவ்வாறு சென்றாலும் மீன் கிடைப்பதில்லை .கடல் முழுவதும் சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. எமது படகுகள், வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மீனவ மக்களுக்கு எங்களது சங்கத்தின் மூலம் நாங்கள் கடன் எடுத்துக் கொடுத்திருக்கின்றோம். அவர்களுக்குரிய தொழில் எல்லாம் இந்த புயலால் நிர்மூலம் ஆகியுள்ளது. ஆகவே அந்த கடனை அவர்கள் எவ்வாறு கட்டப் போகிறார்கள் .அவர்களது குடும்பத்திற்கு ஒவ்வொரு நாளும் எவ்வாறு உணவு கொடுக்கப் போகிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புயல் வெள்ளத்தில் இறந்தவர்களை விட மன்னாரில் மீனவ மக்கள் பட்டினியால் சாகப் போகிறார்கள் .அப்படி ஒரு நிலைமைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு எமது மக்களுக்கு நிவாரணத்தை விரைவாக கொடுக்க வேண்டும் .கடல் தொழில் அமைச்சர் ,அரச அதிகாரிகளோ மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எம்மை வந்து சந்தித்து எமது மீனவர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என குறித்த மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்..
Reviewed by Vijithan
on
December 06, 2025
Rating:


No comments:
Post a Comment