அண்மைய செய்திகள்

recent
-

வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதே அரசிற்கு நல்லது; எச்சரிக்கிறார் ஹஸன் அலி

வட மாகாணத்திற்கு உரிய அதிகாரங்களை அரசாங்கம் வழங்குவதே சிறந்தது. இல்லையேல் சர்வதேச ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வடக்கிற்கு உரிய ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கவேண்டும் இல்லாது விடின் விளைவுகள் பலமாக இருக்கும்.

 அத்துடன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்விலும் கடுமையான விமர்சனங்களையும், பிரேரணைகளையும் இலங்கை அரசு எதிர்நோக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் ஆயுத அடக்கு முறைக்குள் அவர்களின் விருப்பம் போல் செயற்பட்டார்கள் என்று கூறுபவர்கள் இன்றைய யாதார்த்த நிலைமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாட்டில் புலிகள் இல்லை. அவ்வாறான சூழலில் அவர்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதான ஒரு கட்டமைப்பினையே இன்றும் வேண்டி நிற்கின்றனர். 

இதனை அவர்கள் தங்களது ஜனநாயக ரீதியிலான வாக்குப் பலத்தின் ஊடாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்டியும் உள்ளனர். எனவே தங்களது பிராந்தியத்துக்கு பிராந்திய ரீதியிலான அதிகாரம் தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவான அவர்களது ஆணை மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே, இவற்றினை எல்லாம் இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு சட்ட ரீதியான அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்குவதுடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அதைவிடுத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், முஸ்லிம்களையும் ஏமாற்ற நினைப்பது போன்று தமிழர்களை இனியும் அரசாங்கம் ஏமாற்ற முடியாது.

 அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் இன்று சர்வதேச ரீதியாகப் பேசப்பட்டு வருவது மட்டுமன்றி அதற்கு தமிழ் மக்கள் இன்று அதிகப்படியான ஆணையை வழங்கி விட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதே அரசிற்கு நல்லது; எச்சரிக்கிறார் ஹஸன் அலி Reviewed by Admin on September 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.