எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மதத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும், பண்டிகைக் காலத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கான விசேட திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
"அனைத்து தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள அனைத்து மதத் தலங்களின் தலைவர்களையும் சந்தித்து, எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடும் பொதுமக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்களும் இது குறித்து அவதானமாக இருந்து, ஏதேனும் சந்தேகத்திற்குரிய நபர், குழு அல்லது பொருட்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவிக்க முடியும்.
இந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முப்படையினரையும் இணைத்துக் கொண்டு இத்திட்டம் பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் சிவில் உடையில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர்."
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மதத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:


No comments:
Post a Comment