விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை
தோஹாவிலிருந்து இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் குறித்தே இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த விமானத்திற்குள் நால்வர் வெடிப்புச் சம்பவமொன்றை நிகழ்த்தத் தயாராக இருப்பதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து செயற்பட்ட விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து விமானியிடம் வினவியபோது, விமானத்தினுள் அத்தகைய பாதுகாப்பற்ற நிலைமை எதுவும் இல்லை என விமானி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் அது பாதுகாப்பு முனையத்திற்கு (Isolation Bay) கொண்டு செல்லப்பட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது விமானத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1.07 மணிக்கு தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
கடந்த 26ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலைப் போன்றே, இதுவும் ஒரு போலியான தகவல் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மின்னஞ்சல்களும் வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை
Reviewed by Vijithan
on
December 28, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 28, 2025
Rating:


No comments:
Post a Comment