அண்மைய செய்திகள்

recent
-

புர்கா அணிந்து வந்த துப்பாக்கிதாரி: ஜிந்துப்பிட்டி படுகொலையின் திடுக்கிடும் பின்னணி!

 கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம், வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் குற்றவாளியான 'பழனி ரிமோஷன்' என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி புர்கா அணிந்த பெண்ணைப் போல வேடமிட்டு வந்திருந்தமை சிசிடிவி (CCTV) கெமராக்களில் பதிவாகியுள்ளது. மற்றொரு சந்தேகநபர் கையில் பிஸ்டல் ஏந்தியவாறு நடமாடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. 

சந்தேகநபர்கள் தாங்கள் இலக்கு வைத்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர், அங்கிருந்து ஓடிச் சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஜேசு நாசர் என்றழைக்கப்படும் கொனிஸ்டன் எனும் 44 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இதன்போது, அவருக்கு அருகில் இருந்த அவரது 3 வயது மகனும், 2 வயதுடைய உறவினரான பெண் குழந்தையும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த நபர், பிரபல குற்றவாளியான 'பூக்குடு கண்ணா' தரப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த கொனிஸ்டனின் மனைவி, பழனி ரிமோஷனின் சித்தியுடன் ஏற்பட்ட தகராறின் போது அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளமை விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தத் தகராறு காரணமாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

உயிரிழந்த கொனிஸ்டன் வட்டிக்குப் பணம் கொடுப்பவர் என்றும், அவர் இரகசியமாகப் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், அவர் இதுவரை எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காகவும் கைது செய்யப்படவில்லை என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் மேற்பார்வையில், கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




புர்கா அணிந்து வந்த துப்பாக்கிதாரி: ஜிந்துப்பிட்டி படுகொலையின் திடுக்கிடும் பின்னணி! Reviewed by Vijithan on January 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.