அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக கண்டனம். மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடக சந்திப்பு.

 மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக  போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு  வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக  பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.


மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.


குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,


அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.


இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது.


பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும்.


அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.


 குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும்.


பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும்.


 சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.   பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.


அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. 


பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது .


 மேலும் பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த   இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன்   தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும்.

 

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






மன்னாரில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக கண்டனம். மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடக சந்திப்பு. Reviewed by Vijithan on January 29, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.