மன்னார் நகர சபையின் நிரந்தர சேமிப்புக் கணக்கில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் வைத்தியசாலையில் ஒரு நவீன ரக வெளிநோயாளர் பிரிவு அமைக்க தீர்மானம்- தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு
மன்னார் நகர சபையினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நகர சபையின் நிதியில் இருந்து முன்னெடுக்கப்பட உள்ளதோடு நகர சபையின் நிரந்தர சேமிப்புக் கணக்கில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் வைத்தியசாலையில் ஒரு நவீன ரக வெளிநோயாளர் பிரிவு அமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நகர சபையின் பத்தாவது கூட்டத்திலே நாங்கள் பல முக்கியமான தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். மன்னார் வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் மன்னார் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நாங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மன்னார் நகர சபையின் நிரந்தர சேமிப்புக் கணக்கில் இருந்து 100 மில்லியன் (10 கோடி) ரூபாய் வழங்குவதென தீர் மானித்திருக்கிறோம்.
இந்த நிதியின் ஊடாக மன்னார் வைத்தியசாலையில் ஒரு நவீன ரகமான வெளிநோயாளர் பிரிவுக்கான (OPD) கட்டிடத்தை அமைப்பதே எமது நோக்கமாகும். ஒரு தனியார் வைத்தியசாலையில் எவ்வாறு வெளிநோயாளர் பிரிவு இருக்குமோ, அதே போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடத்தை அமைக்க உள்ளோம். அதில் ஒரு சிறிய அவசர அறுவை சிகிச்சை கூடம்,
இரத்த வங்கி ,வெளி நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுச் செல்வதற்கான இரண்டு கவுண்டர்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் தீர்மானத்துக்கு சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்தனர். இருப்பினும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் பிரசாத் ஆகிய இரு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
வீதி போடுவதற்கும் கால்வாய் அமைப்பதற்கும் பணம் தேவைப்படும் நிலையில், ஏன் வைத்தியசாலைக்கு வழங்குகிறீர்கள் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர்.
இருந்தபோதிலும், மன்னார் மக்களின் உயிரை நாங்கள் மிகவும் அக்கறையுடன் காக்க வேண்டும், அவர்களது சுகாதாரத்தை பேண வேண்டும் மற்றும் மருத்துவத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக இந்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ,தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மன்னார் நகர சபை பிரிவில் மன்னார் நகர சபையினால் சுமார் 42 கோடி ரூபாய் (420 மில்லியன்) செலவில் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மன்னார் நகர சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் புதிய அரங்கு மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மன்னார் நகர மண்டபத்தை நவீனமயம் படுத்துவதற்காக 5.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களின் விற்பனை வசதிக்காக புதிய பொதுச் சந்தை ஒன்றை அமைக்க 6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீன முறையில் குப்பைகளை அகற்றி அழிப்பதற்காக மத்திய அரசாங்கத்தினால் 80 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நேரடித் தேவைகளுக்காக 9.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியனுக்கும் இடைப்பட்ட செலவில் 3 வீதிகளை புனரமைக்க 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மன்னார் தரவன் கோட்டை கீரி வீதிக்கு 7.69 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத்திற்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மன்னார் நகர எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் 50 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மாதாந்தம் சம்பளம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் பொலித்தீன் பயன்பாட்டை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தாமரை, வாழை, தேக்கு இலைகள் பயன்படுத்துமாறு கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் இலைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால், விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் அடுத்த மாதத்திலிருந்து இது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
சுமார் 178 அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. நகரின் அபிவிருத்தி பணிகளுக்காக தேவைப்படும் போது இ கட்டிடங்களை அகற்ற உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளனர்.மன்னார் நகரில் உள்ள மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல அரசு கட்டிடங்கள் முறையான அனுமதியின்றி கட்டப் பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவற்றுக்கும் நகர சபையின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
: முறையான வர்த்தக அனுமதி மற்றும் குடிபுகு சான்றிதழ் பெறாமல் செயல்படும் காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராக, மாவட்ட செயலருடன் ஆலோசித்து நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் தவிசாளரால் சுமார் 54 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அவரது சகோதரிக்கு வழங்கப்பட்ட ஒரு கடை மூலம் 1 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊழல் ஒழிப்புத்துறை மற்றும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
March 20, 2026
Rating:


No comments:
Post a Comment