மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள்
மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் என்.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,பொலிஸ்,ராணுவ அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்வி, விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க,,,,
1990 ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.2010, 2011 மற்றும் 2012 காலப்பகுதிகளில் அவர்கள் மீண்டும் குடியேறினாலும், அவர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பழைய ஆவணங்களைக் கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவான ஒரு நஷ்ட ஈட்டுத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலப் பகிர்வு தொடர்பான சிக்கல்கள்- யோதவாவி திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.
31,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
சில நிலங்கள் ஏலம் விடப்பட்டு, பெரும் தொகை வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து சட்ட ரீதியான விசாரணை நடத்த ஆளுநர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, வரும் 25ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து நிலைமைகளை நேரில் ஆராய்வார்கள்.
இதன் மூலம் பொதுமக்கள் நிலங்களை அதிகபட்சமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கான சலுகைகள்-மாவட்டத்தில் உள்ள மிகவும் ஏழ்மையான மற்றும் முதியவர்களை கொண்ட குடும்பங்களுக்குத் குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை பெறுவதில் நிதிச் சிக்கல்கள் உள்ளன.மாதக் கட்டணத்தைச் செலுத்த முடிந்தாலும், ஆரம்ப இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த அவர்களால் முடியவில்லை.
இத்தகைய குடும்பங்களுக்குத் தற்போதைய அரசால் இலவசமாக நீர் மற்றும் மின்சார இணைப்புகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
May 12, 2026
Rating:


No comments:
Post a Comment