டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்திப் பயணிகள் போக்குவரத்தில் பேருந்துகள் ஈடுபடுத்தப்படுவதாகப் பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இதற்கமைய நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் தெளிவுபடுத்தி விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன்படி மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் 100 பேருந்துகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
இதன்படி, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்துகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலும் சில பேருந்திகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தப் பேருந்துள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கமைய அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்துத் தெளிவுபடுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும், ஏதேனும் தரப்பினர் தேவையற்ற முறையில் கொள்கலன்களில் மண்ணெண்ணெயைக் கொண்டு செல்கிறார்களா? என்பது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார்.
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
Reviewed by Vijithan
on
July 17, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 17, 2026
Rating:


No comments:
Post a Comment