படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின்சிலை திறப்பு ஏற்பாட்டுக்கு எதிராக வழக்கு ; நீதிமன்று கொடுத்த உத்தரவு
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (20) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் அதன் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதேவேளை, 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்களின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள், ஜூலை 25 மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் இருந்த ஏனைய கைதிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
Reviewed by Vijithan
on
July 21, 2026
Rating:


No comments:
Post a Comment