அண்மைய செய்திகள்

recent
-

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்

 நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்று மற்றும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் மற்றும் முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம் Reviewed by Vijithan on September 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.