நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை!
கொழும்பு நகரம் முழுவதும் நாளை (29) முதல் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 121 பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு மக்களை அதிகளவில் ஊக்குவிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பஸ்களுக்கான பஸ் முன்னுரிமை ஒழுங்கை (Bus Priority Lane) முறைமை முன்னதாக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மெட்ரோ பஸ் சேவையின் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு இயங்கும், அனைத்து இடங்களிலும் நிறுத்தப்படாத, சட்டத்தை மதிக்கக்கூடிய சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கொண்ட முறையான பஸ் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு திசையிலும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை மறு திசையிலும், வீதியிலுள்ள மூன்று வழிகளில் ஒரு வழி, பொதுப்போக்குவரத்து பஸ்களுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை!
Reviewed by Vijithan
on
September 28, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 28, 2026
Rating:


No comments:
Post a Comment