காலநிலை மாற்றத்திற்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்! மன்னாரில் சர்வதேச விழிப்புணர்வு நிகழ்வு
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தில், அதற்குக் காரணமான தரப்புகள் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிரீன்பீஸ் சவுத் ஆசியா (Greenpeace South Asia ) அமைப்பின் ஏற்பாட்டில் காலநிலை மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
தெற்காசியாவில் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதுடன், இத்தகைய பாதிப்புகளுக்குக் காரணமான தரப்புகள் தமது பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சைக்கிள் பயணத்தை மேற்கொண்ட பிரதிநிதிகளும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, காலநிலை மாற்றத்தால் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மன்னார் மாவட்டத்தின் கிரிக்கடற்கரைப் பகுதியில் மனித உருவக் காட்சிப்படுத்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதற்குக் காரணமான தரப்புகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான செய்தியைப் பரப்பும் நோக்கிலும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மன்னார் போன்ற கடலோர மாவட்டங்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடிய சூழலில், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் எடுத்துரைப்பதற்கும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கும் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன
Reviewed by Vijithan
on
October 10, 2026
Rating:






No comments:
Post a Comment