அண்மைய செய்திகள்

recent
-

6 சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த இலங்கைத் தேரருக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை!

 சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த குற்றம் இலங்கையில் பிறந்த பௌத்த தேரர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மெல்பேர்னில் உள்ள தம்ம சரண விகாரையின் (Dhamma Sarana) விகாராதிபதியான 71 வயது நாவட்டுன்னே விஜித (Naotunne Vijitha) தேரருக்கு, விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் தண்டனை விதித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விஜித தேரர் இலங்கை பௌத்த சமூகத்தில் தனக்கு வழங்கப்பட்டிருந்த மதிப்புமிக்க நிலையைப் பயன்படுத்தி சிறுமிகளை வன்புணர்ந்திருப்பது, நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட தீவிரமான துரோகம் என நீதிபதி பிரதீப் டிவானா (Pardeep Tiwana) குறிப்பிட்டுள்ளார்.


2025ஆம் ஆண்டு விஜித தேரர் 17 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். அவற்றில், சிறுமியொருவருடன் பாலியல் ஊடுருவலில் ஈடுபட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளும், சிறுமியொருவரிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட எட்டு குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன.


1994 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் மெல்பேர்னின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ (Springvale and Keysborough) பகுதிகளில் இயங்கிய விகாரையில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.


விஜித தேரர் இளம் சிறுமிகளைத் தனது தங்குமிடத்துக்கு மீண்டும் மீண்டும் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் அவர்களது பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்தபோதும் இந்த குற்றம் இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது குடும்பத்தினருடன் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக விகாரைக்கு வந்திருந்தனர்.


தண்டனை விதிக்கும் போது, விகாரையில் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பிய பெற்றோர்கள் வைத்திருந்த நம்பிக்கையை விஜித தேரர் பயன்படுத்திக் கொண்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்கள் முன்வந்து பொலிஸாரிடம் வன்புணர்வு குறித்து முறையிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு விஜித தேரர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. குற்றச்சாட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டதுடன், சில முறைப்பாட்டாளர்களை அவர் நினைவில் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.


தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆதரவாளர்களை நோக்கி விஜித தேரர் புன்னகைத்தும் கையசைத்தும் இருந்ததைப் பார்த்து பல பாதிக்கப்பட்டவர்கள் கோபமடைந்ததாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


விஜித தேரர் இலங்கையில் பிறந்ததுடன், தனது 15ஆவது வயதில் பௌத்த துறவற வாழ்க்கையில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


பின்னர் அவர் ஸ்வீடனுக்குச் சென்று அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தம்ம சரண விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்றார்.







6 சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த இலங்கைத் தேரருக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை! Reviewed by Vijithan on October 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.