பலரின் உயிரை காப்பாற்றிய flydubai விமானியை சந்தித்த டுபாய் இளவரசர்
நடுவானில் சக விமானியின் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் சாதுரியமாக செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, டுபாய் இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் நேரில் சந்தித்து பாராட்டினார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி பிளைதுபாய் விமானம்பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி,கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி தாக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்தில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த போதிலும், ஸ்மித் மச்சார் சாதுரியமாக செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தாக்குதல் நடத்திய இணை விமானியைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன், அதில் பயணித்த 174 பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
சவூதியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஸ்மித் மச்சார் எயார் அம்புயூலன்ஸ் மூலம் டுபாய்க்கு அழைத்துவரப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேரில் சென்ற ஷேக் ஹம்தான், ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவரது துணிச்சலையும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய செயலையும் பாராட்டியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கும் எனவும் டுபாய் இளவரசர் உறுதியளித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
October 03, 2026
Rating:


No comments:
Post a Comment