அண்மைய செய்திகள்

recent
-

சம்மாந்துறையில் தொழுகைக்குச் சென்ற முஅத்தின் மீது காட்டு யானை தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பினார்!

 அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் சென்ற 67 வயதுடைய முஅத்தின் ஒருவரைக் காட்டு யானை தாக்கியதில், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.


சம்மாந்துறை ஸபூர் பள்ளிவாசலில் நேற்று (24) சனிக்கிழமை அதிகாலை 4.25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை அலியார் என்ற முஅத்தினே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதன்போது, அவரது துவிச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த மூன்று வருடங்களாக குறித்த பள்ளிவாசலில் முஅத்தினாகக் கடமையாற்றி வரும் அலியார், பள்ளிவாசலுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தை நேரில் கண்ட பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், முஅத்தின் பள்ளிவாசலுக்கு வந்துகொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவர் 'அல்லாஹ், அல்லாஹ்' எனச் சத்தமிட்டதைக் கேட்டு உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.


சம்மாந்துறை பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த அவர், காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளையும் சேதப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.


எனவே, இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


மேலும், இச்சம்பவத்தில் பள்ளிவாசல் இமாம் தாக்கப்பட்டதாகச் சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட பள்ளிவாசல் தலைவர், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவோர் அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.











சம்மாந்துறையில் தொழுகைக்குச் சென்ற முஅத்தின் மீது காட்டு யானை தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பினார்! Reviewed by Vijithan on October 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.