அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டில் பிரபல நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் கைது

 தமிழ்நாடு-மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை பொலிஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைத் தேடி வருகின்றனர். மதுரை பைபாஸ் நேரு நகர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் திகதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. கடையின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கிலோ கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டன.



விசாரணை

கொள்ளையர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில், துணை ஆணையர்  தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.


இதில் கொள்ளை நடந்த அதிகாலை 3.34 மணியளவில் ஹெல்மெட், முகமூடி அணிந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் நேரு நகர் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.


இதற்கிடையே, கொள்ளைக்கு முன்பு நகை வாங்குவதுபோல் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர் விசாரணையில், அந்த இளைஞர் வி.கே.பி நகரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது.




இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், அவரது தந்தையான முச்சக்கர வண்டி ஓட்டுநர் சுரேஷ் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு நிஷாந்த் அணிந்திருந்த ஆடைகளை அவரது தந்தை சுரேஷுடன் சேர்ந்து மதுரை அருகே மாடக்குளம் வயல்வெளிப் பகுதியில் எரித்தது தெரியவந்தது.


இதை நேரில் பார்த்ததாக அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் சுரேஷ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நிஷாந்த்தின் தோழியும் மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமுமான திருப்பாலை அய்யர்பங்களாவைச் சேர்ந்த மீனாட்சி (26) என்பவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து அவரையும் பொலிஸார் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் முதற்கட்டமாக 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை 3 பகுதிகளாகப் பிரித்ததாகவும், அதில் 2 பகுதிகளை தங்களிடம் கொடுத்துவிட்டு எஞ்சிய நகைகளுடன் நிஷாந்த் தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளனர்.


க

மேலும், மாடக்குளம் மலையடிவாரத்தில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து மீனாட்சியை போலீஸார் அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது புதருக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த 10 கிலோ நகைகள் அடங்கிய பையை மீட்டனர்.


இதுவரை 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நகைக்கடை கொள்ளையில் 2 பேர் சிக்கியது குறித்து பொலிஸார் கூறும்போது, “நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான நிஷாந்த், தனது தோழி மீனாட்சியுடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.


இதன் அடிப்படையில் மீனாட்சியிடம் விசாரணை நடத்தியபோது, கொள்ளையில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நிஷாந்த்தின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் கடைசியாக திருப்பூரில் இருந்தது கண்டறியப்பட்டது.




அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் செல்போனை வாங்கி, அதன் மூலம் மீனாட்சியுடன் பேசியுள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்தக் கொள்ளையில் நகைக்கடை ஊழியர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.


தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைக் கைது செய்தால் மட்டுமே கொள்ளையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மீதமுள்ள நகைகள் எங்கு உள்ளன என்பது குறித்த முழு விவரங்களும் தெரியவரும்” என்றனர்.





தமிழ்நாட்டில் பிரபல நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் கைது Reviewed by Vijithan on November 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.