வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் சாத்தியம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்காக தீவைச் சூழவுள்ள கடற்பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தத் தாழ்வு பிரதேசம் இன்று (25) காலை 8.30 மணியளவில் வட அகலரேகை 15.3° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 91.2° க்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இத்தொகுதி இன்று வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதி ஊடாக நகர்ந்து, தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைவதற்குக் மிக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இத்தொகுதி தொடர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக திசைமாறி, மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (26) காலையளவில் சூறாவளியாகவும் (Cyclone), நாளை மறுதினம் (27) காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த புயலாகவும் மேலும் தீவிரமடைவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
வட அகலரேகை 10° - 20° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80° - 95° ஆகிய எல்லைகளுக்குட்பட்ட கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.
இதனால் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீட்டர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.
இடிமழையின் போது: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
October 25, 2026
Rating:


No comments:
Post a Comment