மஹிந்த ராஜபக்ஷ அரங்கு கதிரை மோசடி- முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்காக கதிரைகளை கொள்வனவு செய்த போது அரசுக்கு 79 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) முற்பகல் 9.45 மணியளவில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்காக கதிரைகளை கொள்வனவு செய்த போது, உரிய தரத்துடன் குறைந்தபட்ச விலையை முன்வைத்த தனியார் நிறுவனத்திடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்யாமல், வேறொரு தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இதன் மூலம் அரசுக்கு 7,973,114.50 ரூபாய் நிதி நஷ்டத்தை ஏற்படுத்தி, வெளித்தரப்பொன்றுக்கு சட்டவிரோத நன்மையை பெற்றுக்கொடுத்ததன் மூலம் 'ஊழல்' குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Reviewed by Vijithan
on
November 02, 2026
Rating:


No comments:
Post a Comment