மன்னாரில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தேசிய மாணவர் தூதுவர் திட்டத்தின் கீழ், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துதல், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்துதல், உளநலம் மற்றும் மாணவர் நல்வாழ்வை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் 2026 நவம்பர் 03ஆம் திகதி மன்/ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் (Mn/Andankulam RCTMS) சிறப்பாக நடைபெற்றது.
இப்பயிற்சித் திட்டத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகள், தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, தொடர்பாடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் திறன்களை வளர்ப்பதுடன், சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, உளநலம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு தொடர்பான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க வளவாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வுகளை வழங்கினர்.
வளவாளர்கள்:
1. வைத்தியர் S.E. Wickramatne – உளநலப் பிரிவு மருத்துவ அதிகாரி, மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்.
2. G.S.M.M.S. Coonghe – தாதிய உத்தியோகத்தர், யௌவன் பியச, மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்.
3. திருமதி M. Valentina – ஆலோசகர், மாவட்டச் செயலகம், மன்னார்.
4. B. James Jenin – பொலிஸ் உத்தியோகத்தர், DCDB, மன்னார்.
5. திருமதி R. Shanthini – நன்னடத்தை உத்தியோகத்தர், மாந்தை மேற்கு.
6. திரு Dais – சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாந்தை மேற்கு.
7. L. Stanislaus – கல்வி நிர்வாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்.
பயிற்சி அமர்வுகளின்போது சிறுவர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், பாடசாலைச் சூழலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், உளநலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், சக மாணவர்களுக்கிடையிலான ஆதரவு, தலைமைத்துவம், தொடர்பாடல் மற்றும் ஆக்கபூர்வமான தீர்மானம் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய விடயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
குறிப்பாக, மாணவர்கள் தமது பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டாளர்களாகவும், சக மாணவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்புமிக்க மாணவர் தூதுவர்களாகவும் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் பாடசாலைகள், பெற்றோர், அரச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
கல்வி, சுகாதாரம், உளசமூக சேவை, நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் நடைபெற்ற இப்பயிற்சித் திட்டம், பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. S. I. பெர்னான்டோ மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் திரு. தர்மகுலசிங்கம் சிவனந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்.
“பாதுகாப்பான சிறுவர்கள் – வலுவான மாணவர் தலைமைத்துவம் – ஆரோக்கியமான எதிர்காலம்” என்ற இலக்கை நோக்கி இத்தகைய விழிப்புணர்வு மற்றும் பயிற்சிச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது
Reviewed by Vijithan
on
November 03, 2026
Rating:








No comments:
Post a Comment