அண்மைய செய்திகள்

recent
-

சூரன் போர் -சூரசங்காரம்-கதைச் சுருக்கம்

கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று, முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது. 

 சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான். 

அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான். வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை. முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான். சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். 

அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற “இந்திரஞாலம்” என்னும்தேரை அழைத்து முருகனின்படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுத்தி தன் உடைமையாக்கிக் கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. கடைசியாக சூரன் தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். 

முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான். தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். 

கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது. ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும்தன்னுடன் பிணைத்துக் கொண்டார். கந்த புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள். முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். 

இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர். சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும். இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான்.

 கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம். முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன! மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

 கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி! சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும்.பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார்.

 மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது. சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.


சூரன் போர் -சூரசங்காரம்-கதைச் சுருக்கம் Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.