அண்மைய செய்திகள்

recent
-

திருக்கோணேஸ்வரம்


திருக்கோணமலைஇறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்
தல மரம் : கல்லால மரம்
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நிரைகழ லரவஞ் சிலம்பொலி

தல வரலாறு


இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.
சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என்று வழங்குகின்றது.
போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.
அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர்.
சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர்.
கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்; அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.
முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.


சிறப்புக்கள்
உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.
சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும், கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.
மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன.
குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாயுள்ளன.
இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன.
இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
பாண்டியன் திருக்கோணமலையில் 'இணைக்கயல்' பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும்.
ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது.
நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும்.
திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.


அமைவிடம்
நாடு : இலங்கை

மாநிலம் : திருக்கோணேஸ்வரம் கிழக்கு திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளது. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.



--------------------

திருக்கோணேச்சரம்
(திருக்கோணேஸ்வரம்)


இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.

வரலாறு
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.


போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்ரான் ரைண்டீசா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஆதி கோணேச்சரம்
திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.


மீள் கட்டுமானம்
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே.
திருக்கோணேஸ்வரம் Reviewed by NEWMANNAR on September 14, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.