வவுனியா மாவட்ட மூன்று பிரதேசசபைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட முகவருமான சிவசக்தி ஆனந்தன் வேட்புமனுக்களை வவுனியா மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளித்தார்.
இவருடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னைநாள் நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் டேவிட் நாதன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், மற்றும் மூன்று பிரதேசசபைக்கான வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வேட்புமனுக்களைக் கையளித்ததின் பின்னர் சிவசக்தி ஆனந்தன் வேட்பாளர்களின் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், 'முல்லைத்தீவில் அரசாங்கம் தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் ஒளிந்துகொண்டு போட்டியிடுவதே எமக்குக் கிடைத்த முதல் வெற்றி.
இதன் மூலம் வடக்கு-கிழக்கில் அனைத்து இடங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.
நாம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து அதற்கான அங்கீகாரத்தைக் கேட்டிருந்தோம் அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்களித்தனர். அதனைப்போன்று இத்தேர்தலிலும் நாம் எமக்கு என்ன தேவை என்பதையும் எமது அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகளையும் முன்வைத்து மக்களிடம் கேட்கப்போகின்றோம்.
அதற்கும் எமது மக்கள் தமது பூரண ஆதரவினைத் தருவார்கள் என்று நம்புகின்றோம். நாம் இழந்தவைகளுக்கு ஈடாக எமக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அத்தேர்தல் எமக்கு ஒரு கருவியாகப் பயன்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்சிகளை மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு உழைத்து எமது லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாகக் கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.
வவுனியா மாவட்ட மூன்று பிரதேசசபைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
Reviewed by NEWMANNAR
on
January 27, 2011
Rating:
No comments:
Post a Comment