தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது எனவும், இது தொடர்பாக நீதியான விசாரணை தேவை எனவும் வற்புறுத்தி வரும் மிக முக்கியமான காலகட்டத்திலேயே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
சர்வதேச சமூகம் கொடுத்து வரும் இந்நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக அரசு உள்ளூராட்சித் தேர்தல்களில் வென்று தமிழ் மக்கள் தம் பக்கம் என்று காட்டுவதற்காகப் பெரும் பாடுபட்டது.
அரச இயந்திரம் முழுவதையும் களமிறக்கி உள்ளூராட்சித் தேர்தலை ஒரு யுத்தம் போல எதிர் கொண்டது. இலவசங்களை அள்ளி வீசியது. வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்தது. வேட்பாளர்களை என்ன விலை கொடுத்தேனும் வாங்க முயற்சித்தது. அவர்களை அச்சுறுத்தித் தேர்தலிருந்து விலக வைக்க முயற்சித்தது. உளவியல் ரீதியான பீதியை ஏற்படுத்திப் பொது மக்களை வாக்களிப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது. வாக்காளர்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றித் தாக்குதலும் நடாத்தியது. ஆனால் ஆசை வார்த்தைகளையும், அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது; தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பெரு வெற்றி பெற செய்துள்ளனர். அரசையும் அதன் தரப்பினரையும் படுதோல்வி அடைய செய்துள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தமது தாயக்கத்தில் சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சுயாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. எந்த சலுகைகளுக்காவும் அச்சுறுத்தல்களுக்காகவும் தங்கள் அரசியல் அபிலாசையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற செய்ததன் மூலம் மீண்டும் ஒரு முறை பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ஜனநாயக பூர்வமான தீர்வுக்கு தலை வணங்கி, இனி மேலும் காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வினை முன் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள அரசின் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை என்பதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் இந்த தீர்புக்கு மதிப்பளித்து இலங்கை அரசு சர்வதேச விசாரணையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது. தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில்இலங்கை அரசைச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வற்புறுத்த வேணிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
எமது வேண்டுகோளை ஏற்றுப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் வாக்குச் சாவடிகளுக்குச் சாரி சாரியாகச் சென்று தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை ஒரு தேசியக் கடமையாக நிறைவேற்றி வைத்த தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பு தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
சுரேஸ்.க.பிறேமச்சந்திரன் பா.உ
இணைச் செயலர்,
உத்தியோக பூர்வ பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 26, 2011
Rating:

No comments:
Post a Comment