பேசாலை 50 வீட்டுத்திட்ட மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு
மன்னார், பேசாலை, 50 வீட்டுத்திட்ட மக்களின் மீள் குடியேற்றத்திற்கான உதவிகளை வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை நேற்று வியாழக்கிழமை கையளித்தது.
மேற்படி தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.சுனேஸ் தலைமையில் இந்த மகஜர், அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பேசாலை 50 வீட்டுத்திட்ட கிராமமானது பேசாலையின் வட மேற்குப்புறமாக 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இக்காணி காணியற்ற வறிய மக்களுக்கு குறைந்த பணத்தில் வழங்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை வின்சன் பற்றிக் அடிகளாரின் முயற்சியுடனும் மக்களின் சிரமதானத்துடனும் காடுகள் அழிக்கப்பட்டு, வீதிகள் அமைக்கப்பட்டு சேவா லங்கா நிறுவனத்தினால் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பங்குத்தந்தையின் விடா முயற்சியினால் ஜெ.ஆர்.எஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 50 வீட்டுத்திட்டம் பெறப்பட்டு குறித்த நிறுவனத்தின் நிதி மற்றும் பொருள் உதவியுடன் மக்களின் பங்ளிப்புடன் 50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.இதன் போது இக்கிராமத்திற்கென பொது மண்டபம்,பொதுக்கிணறு ஆகியனவும் அமைக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அவர்களினால் இக்கிராமம் வெற்றி மக்களின் என பெயர் சூட்டப்பட்டது. இவர்கள் அங்கு மின்சார வசதி அற்ற நிலையிலும்,ஏணைய அபிவிருத்தி பணிகளையும் எதிர்பார்த்திருந்தனர்.
இவர்கள் குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளில் குடியமர்ந்து 4 மாதங்கள் ஆகிய நிலையில் அங்கு ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த கிராமத்தை விட்டு வெளியேறினர். தற்போது இம்மக்கள் இடம் பெயர்ந்து 7 வருடங்கலாகியும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் அரசுக்குச் சொந்தமான ரயில் பாதையிலும் வாழ்ந்து வரும் இம்மக்கள் தற்போது மீள் குடியமறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் உதவியும் மனியமும் பெற்று தற்போது சேதமுற்ற நிலையில் உள்ள தமது வீடுகளை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எந்த அதிகாரிகளும் சிந்தித்துப்பார்ப்பது இல்லை. தற்போது 39 குடும்பங்கள் குடியமர்த்தப்படாமல் ஓலைக் குடிசைகளிலும், உறவினர்கள் வீடுகனிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய 11 குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து சென்ற நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்கள் எவ்வித சுய தொழிலும் இன்றி காணப்படுகின்றனர். எனவே தற்போது குறித்த கிராமத்தில் அடிப்படைத் தேவைகளான மின்சாரவசதி, போக்குவரத்து வசதி, வீதி புணரமைப்பு, உள்ளக வீதிகள் அமைத்தல், மலசல கூட வசதி, குடிநீர் வசதி, பாலர் பாடசாலை, வாழ்வதார உதவிகள், வீடுகள் திருத்தும் பணி, காடுகள் அழித்தல் போன்ற தேவைகள் குறித்த கிராமத்தில் காணப்படுகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த பிரச்சினைகளை பூர்த்தி செய்து சிறந்த மீள் குடியேற்றச்சூழலை குறித்த கிராமத்தில் ஏற்படுத்தித்தருமாறு அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேசாலை 50 வீட்டுத்திட்ட மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு
Reviewed by Admin
on
June 01, 2012
Rating:

No comments:
Post a Comment