அண்மைய செய்திகள்

recent
-

(3ம் இணைப்பு )முஸ்லீம் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் படங்கள் இணைப்பு.

மன்னார் கோந்தைப்பிட்டி மீன்பிடி துறைக்கு உரிமை கோரி முஸ்லிம் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு பொலிசார் முயன்றபோது ஏற்பட்ட கலவரத்தில் பொது மக்கள் சிலரும் 3 அதிகாரிகள் உட்பட 6 பொலிசாரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கலகத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 17 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்ற கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையில் தொழில் செய்து வந்த தமிழ் மீனவர்களுக்கு அதிகாரிகள் மாற்றிடம் ஒன்றை ஒழுங்கு செய்யும் வரையில் அந்தத் துறையில் தமிழ் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உள்ளுர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர் தமிழோசையிடம் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெறுவதற்கு முன்னர் போர்ச்சூழல் காரணமாக மன்னார் விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்து மன்னார் நகரப்பகுதிக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள் கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையில் மீன்பிடிப்பதற்கு முஸ்லிம் மீனவர் சங்கங்கள் அனுமதி வழங்கியிருந்தன.

கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்திற்குச் சென்றிருந்த முஸ்லிம் மீனவர்கள் திரும்பி வந்ததையடுத்து கோந்தைப்பிட்டி துறையைத் தங்களுக்குத் தருமாறு கேட்டிருந்தனர். இதனால் தமிழ் மீனவர்களுக்கு மன்னார் இரண்டாம் கட்டைப் பகுதியில் இடமொன்று ஒதுக்கப்பட்டது.

ஆயினும் தனியாராகிய முஸ்லிம் ஒருவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, அங்கு மீன்பிடிப்பதற்கான அனுமதியை மறுத்து அதற்கான நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றிருந்தார்.
இதனால் மாற்றிடம் ஒன்று ஒழுங்கு செய்யப்படும் வரையில் தமிழ் மீனவர்கள் கோந்தைப்பிட்டியிலேயே மீன்பிடிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.
ஆயினும் இவர்கள் அங்கு மீன்பிடிக்கக் கூடாது எனக் கூறிய முஸ்லிம் மீனவர்கள் கட்நத வெள்ளிக்கிழமை கோந்தைப்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த மீன்வாடிகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் என்பவற்றைச் சேதமாக்கியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மன்னார் நீதிமன்றம், மாற்றிடம் கிடைக்கும் வரையும் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதனை எவரும் தடைசெய்யக் கூடாது என்றும் பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்தும், கோந்தைப்பிட்டியில் இருந்து தமிழ் மீனவர்கள் வெளியேற்றப்பட்டு அது உடனடியாகத் தங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரியும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் மீனவர்கள் - ஆண்கள் பெண்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு சமூகமளித்திருந்த அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் அடுத்த மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிடம் ஒன்றை தமிழ் மீனவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் அதுவரையில் தமிழ் மீனவர்கள் கோந்தைப்பிட்டியில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மீனவர்கள் இந்த உத்தரவைக் கேட்டு, ஆத்திரமடைந்து உடனடியாக கோந்தைப்பிட்டி துறைமுகம் தங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி மன்னார் நகருக்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால், மன்னார் நகருக்குள் செல்வதற்காக வெளியிடங்களில் இருந்துவந்த பயணிகள் மன்னார் பாலத்தில் வாகனங்களிலேயே தேங்கியிருக்க நேர்ந்தது.
இதேபோன்று மன்னார் நகரப்பகுதியில் இருந்து வாகனங்கள் பிரதான வீதியூடாக வெளியில் செல்ல முடியாத நிலைமையும் எற்பட்டு பதட்ட நிலைமை உருவாகியது. இந்த நிலைமை இரண்டு மணித்தியாலங்கள் நீடித்தது. நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தடியடிப் பிரயோகம்
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கல்லெறியில் ஈடுபட்டனர்.
இதனால் நீதிமன்றக் கட்டடக் கண்ணாடிகளும் அருகில் இருந்த தனியார் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளின் கண்ணாடிகளும் நொறுங்கின. நகரில் திறக்கப்பட்டிருந்த தமிழ் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டன. நகரில் இருந்தவர்கள் அச்சமுற்று ஓடி மறைந்தனர். பலர் கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
கலத்தை அடக்குவதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்தக் கலவரத்தில் மூன்று அதிகாரிகள் அடங்கலாக 6 பொலிசாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். 17 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நகரில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிககப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.





















(3ம் இணைப்பு )முஸ்லீம் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் படங்கள் இணைப்பு. Reviewed by NEWMANNAR on July 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.