அண்மைய செய்திகள்

recent
-

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க்கிராமம்


வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவௌ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசைச் சாடுகின்றார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.


இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தின்கீழ் இயங்கிய வெலிஓயா, புதிதாக வலிந்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நிர்வாகத்தின்கீழ் யுத்தம் ஓய்விற்கு வந்தபின்னர் இணைத்துக்கொள்ளப்பட்டது.

இப்புதிய பிரதேச செயலகமானது, அரச நிர்வாக சேவையின் இதுவரை நிலவிய நிர்வாக விதிமுறைக்குப் புறம்பாக, வர்த்தமானியில் அறிவிக்கப்படாமலேயே முல்லைத்தீவு மாவட்டத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன், அதன் எல்லைகள், கிராமங்கள் தொடர்பாகவும் தெளிவற்ற நிலையிலிலேயே உள்ளது.

இப்புதிய பிரதேச செயலாளர் பிரிவான வெலிஓயாவுடன் ஏற்கனவே முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பிரிவின்கீழிருந்த பல பூர்வீகத் தமிழ்க் கிராமங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

அவ்வரிசையில், நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவின்கீழிருந்த 90ஹெக்டயர் வயலுக்குப் பாசனத்தை வழங்கும் 14சதுர கி.மீ. நீரேந்தும் பரப்பளவுள்ளதுமான கொக்கைச்சாண்குளம் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிப் பூர்வீகத் தமிழ்க் கிராமத்தவர்கள் இனக்கலவரத்தில் வெளியேற, இவர்களது 200 ஏக்கர் வயற்காணி மற்றும் குடியிருப்புக் காணிகளில் 2010ஆம் ஆண்டில் 165 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இக்கிராமத்திற்கு ;கலாபோகஸ்வௌ' என சிங்களப் பெயர் சூட்டப்பட்டு, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டு தற்போது மற்றுமொரு நிர்வாகப் பிரிவுக்கு மாற்ற எத்தனிக்கப்படுகின்றது.

இத்தகைய நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தற்போது பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவின்கீழிருந்த அரியகுண்டான் தமிழ்க்கிராமம் 'அதாவெட்டுவௌ' என்று சிங்களப் பெயரிடப்பட்டு, அங்கு 65 சிங்களக் குடும்பங்கள் திட்டமிட்டு அரசால் குடியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுள் குடியேற்றப்பட்ட இச்சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு தற்காலிக, நிரந்தர வீட்டு வசதிகள் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் நேரடிக்கண்காணிப்புக்குள் வேலைத்திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலம்காலமாக வவுனியா மாவட்ட நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிர்வாகக் கிராமமாக இயங்கிவந்த அரியகுண்டான், தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்துடன் வலிந்து இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவினுள் சேர்க்கப்பட்டுள்ளது.

யுத்தகால இடப்பெயர்வுகளுக்கு முன்னர் நெடுங்கேணியைச் சேர்ந்த பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவின் கீழ்வரும் பட்டிக்குடியிருப்பு, பாவற்காய்க்குளம், விண்ணாங்குப்பிட்டி, அரியகுண்டான், தனிக்கல்லு, வண்ணான்கேணி, துவரங்குளம், வயல்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் 203 குடும்பங்களைச் சேர்ந்த 606பேர் வசித்ததாக மாவட்ட திட்டமிடல் செயலகப் புள்ளிவிபரக் கையேடு தெரிவிக்கின்றது.

அரியகுண்டான் குளத்தின்கீழ் 175 ஏக்கர் பாசனக்காணியும் சூழவுள்ள ஏனைய பத்து சிறுகுளங்களின்கீழ் 500 ஏக்கர் வயற்காணிகளும் உள்ளன. கல்லடிக்குளத்தில் 300 ஏக்கரும் வண்ணாகரிச்சகுளத்தில் 250 ஏக்கரும் சேனப்பன்குளத்தில் 250 ஏக்கரும் தனிக்கல்லு மற்றும் எருக்கலம்புலவில் தலா 450 ஏக்கரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன் டொலர்பாம், கென்பாம், சிலோன் தியேட்டர் பண்ணை உரிமையாளர்களுக்கு முறையே ஆயிரம் ஏக்கர் காணிகளும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இவற்றோடு இப்பிரதேசத்தில் 80க்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் காணப்படுவதுடன், இங்கு உறுதிகள் மூலம் உரிமையளிக்கப்பட்ட காணிநிலங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்கள், ஆறுகள், மலைகள் என்பன வரலாற்றுக்காலம் முதல் தமிழ்ப் பெயருடன், தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசமாகும்.

1983ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தின் பின்னர், அன்றைய ஆட்சியாளர்களால் இப்பிரதேசம் மகாவலி 'எல்' வலயம் என வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, தென்னிலங்கைச் சிங்களவர்கள் இங்குக் குடியேற்றப்பட்டனர். பூர்வீகத் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மணலாறு பிரதேசமும் விழுங்கப்பட்டது.

ஒவ்வொரு இனக்கலவரமும் ஓய்வுக்கு வரும்வேளையில், தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதையே அரசு தனது நிகழ்ச்சிநிரலாகக் கொண்டுள்ளது. அதனைப்பேன்றே தற்போது யுத்தம் ஓய்ந்த பின்னர் நெடுங்கேணி, அரியகுண்டான், கொக்கைச்சாண்குளம் மற்றும் ஏனைய தமிழ்க் கிராமங்களிலும் அதே பாணியிலேயே சிங்களக் குடியேற்றங்கள் ஆட்சியாளர்களால் வெகு இலாவகமாக மேற்கொள்ளப்படுகின்றன.

நெடுங்கேணியின் பட்டிக்குடியிருப்பு, ஒலுமடு, கற்குளம் பிரிவுகளில் மீள்குடியேறியோருக்குச் சொந்தமான தனிக்கல்லு, இலுப்பைக்குளம் மற்றும் ஒதியமலை ஆகிய மூன்று குளங்களின்கீழ்வரும் 500 ஏக்கர் வயற்காணிகளின் உரிமையாளர்களை விரட்டிவிட்டு, வெலிஓயா சிங்களவர்களை இங்கு பயிர்ச்செய்கைக்கு அனுமதித்த வெலிஓயா உதவி அரசாங்க அதிபர் உட்பட இராணுவ அதிகாரி மற்றும் சிவில் அதிகாரி ஆகியோரால் தமிழ் விவசாயிகள் அழைக்கப்பட்டு, இந்தக் காணிகள் யாவும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வருமாறும் மறுப்பவர்களின் காணி அனுமதிப்பத்த்pரங்கள் இரத்துச் செய்யப்பட்டு காணிகள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் கொண்டுவரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டனர்.

மேற்படி விடயத்தினை 28.12.2010திகதிய கடிதம் மூலம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன்.

இதற்கு விளக்கமளிக்கக்கோரி காணி ஆணையாளர் நாயகம் சிறிலங்கா மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திடம் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலாக அவரால் காணி ஆணையாளர் நாயகத்திற்கு முகவரியிட்டு ஜனாதிபதிக்கும் எனக்கும் பிரதியிடப்பட்ட 06.09.2011 திகதிய கடிதத்தில், 'இப்பிரதேசங்களில் தற்போது சிறிலங்கா மகாவலி அதிகார சபையினால் எந்தவொரு அபிவிருத்தியும் நிறைவேற்றப்படாததால், அக்காணிகள் மகாவலி அபிவிருத்திப் பிரேரணையின்கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் எதுவும் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரதேசத்தில் காணப்படும் நீர்நிலைகளைப் புனரமைக்காது அதற்கான திட்டம் எதனையும் வகுக்காமல், மகாவலி நீர்வழங்கல் மேற்கொள்ள நீர்மட்ட அளவீடுகள் குறித்தோ, நீர்வழங்கும் உயர் அளவு நிலையில் இப்பிரதேசம் அமைந்துள்ளதா என்பது குறித்தோ ஆய்வுகள், ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், இத்திட்டத்தின் உள்நோக்கம் பூர்வீகத் தமிழர்களை விரட்டியடித்துவிட்டு, சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரசினால் நன்கு திட்டமிட்டு நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது.

'காணிக்காரரை காணியில் விடவேண்டும்' என்ற இயற்கை நீதிச்சட்டம் மீறப்படும் இத்தகைய மக்கள் விரோத அரசின் செயற்பாடு உடன் விலக்கிக்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க்கிராமம் Reviewed by NEWMANNAR on August 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.