மன்னார் நீதவானின் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ரிசாட் பதியூதீன் -
சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசுவதன் காரணமாக தமக்கு எதிராக விமர்சனங்கள் செய்யப்படுவதாக மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாடுவோருக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுத்தல் தம்மை பிரிவினைவாதி, விடுதலைப் புலி ஆதரவாளர், சர்ச்சைக்குரிய பேராயர் என்றெல்லாம் குற்றம் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் கவலையடைப் போவதில்லை எனவும் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை எனவும், ஆறு படகுகளே முஸ்லிம்களிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் வர்த்தகர்கள் எனவும், ஒர் பருவகாலத்தில் மட்டும் கடல் அட்டைகளை பிடிப்பதற்காக முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற் கரையிலிருந்து 200 மீற்றர் அளவிலான பரப்பிலேயே தமிழ் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் எனவும் தேவையென்றால் 200 மீற்றருக்கு அப்பால் முஸ்லிம்கள் மீன்பிடியில் ஈடுபட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உப்புக்குளம் பகுதியில் 300 தமிழ் குடும்பங்கள் கடந்த பதினொரு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்க அதிபர் மற்றும் கிராம சேவகர் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே மீனவர் பிரச்சினை தொடர்பில் மன்னார் நீதவான் தீர்ப்பளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரின் அனுசரணையின்றி அந்தளவு பாரிய ஆர்ப்பாட்டத்தையோ போராட்டத்தையோ நடத்தியிருக்க முடியாது னஎ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதவானுடன் நட்புறவு பேணுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனையோரைப் போன்றே நீதவானைத் தெரியும் எனவும், பிரிகேடியர்கள் உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் தாம் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் எனினும் அவர்களின் தொழில் விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டே அமைச்சர் பதியூதீன் இவ்வாறு முஸ்லிம் மக்களை தூண்டி விடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் தலா நான்கு லட்ச ரூபா பெறுமதியான 165 மீன்பிடிப் படகுகளை வழங்கியதாகவும் அவற்றில் 150 படகுகளை அமைச்சர் தமது ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டுமென கோரியதாகவும் பேராயர் இராயப்பு ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகள் உரிய முறையில் இன சமூகங்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதியூதீன் தமக்கு புதல்வர் போன்றவர் எனவும், தனிப்பட்ட ரீதியில் குரோதம் எதுவும் கியைடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இன சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தக் கூடாது என கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கும் தாம் உதவிகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க புள்ளி விபரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமது புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் 146679 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுக்கும் காரணத்தினால் தம்மை சர்ச்சைக்குரிய நபராக சிலர் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அவ்வாறான விமர்சனங்களினால் கொலை அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு பிளவுபடுவதனை தாம் கனவில் கூட விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிர்வாக முறைமைகளில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை முழுயைமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே இலங்கைக்குள் பல்லின மக்களும் வாழக்கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கீதம் எந்த மொழியில் இசைக்கப்பட்டாலும் அது பற்றி தாம் கவலைப்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழர்கள் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடும் போது உணர்வுடன் பாட முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கீதம் உணர்வுடன் பாடப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள், என்ன பாடுகின்றோம் என்ற அர்த்தம் தெரியாமலேயே தேசிய கீதத்தை பாட வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தல்கள் நீதியானதும் சுதந்திரமானதுமாக அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நன்றி லக்பிமநியூஸ், கொலம்போ ரெலிகிராப்
மன்னார் நீதவானின் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ரிசாட் பதியூதீன் -
Reviewed by NEWMANNAR
on
August 12, 2012
Rating:

No comments:
Post a Comment