அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் - நடராஜா குருபரன்-

மன்னாரில் அண்மையில் தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைச்சார்ந்த இரு இன ஒரே தொழிலைபுரியும் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டைப் பொறுப்புணர்வுடன் கையாளாது அதனைத் தமது சொந்த அரசியல் இருப்பிற்காக இரண்டு இனங்களுக்கிடையிலான மோதலாக மாற்றமுயன்றமையை அதில் சம்பந்தப்பட்டவர்களின் அதில் அரசியல் குளிர்காயதலை கேள்விக்கு உள்ளாக்கியதால் என்னைப் பல இஸ்லாமிய சகோதரர்கள் திட்டித் தீர்த்தார்கள். சில நண்பர்கள் நொந்து கொண்டார்கள். இந்த விடயத்தை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.


எனினும் நான் எழுதிய ரிஸாத் பதியுதீனும் புலிகளின் ஆத்மசாந்தியும் என்ற கட்டுரை பல விவாதங்களையும் கேள்விகளையும் என்னை நோக்கிய சவால்களையும் உருவாக்கியிருப்பதால் இந்தக் கட்டுரையையும் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

தமக்கு எதிராக வரும் அழுத்தங்களைத் திசை திருப்ப தமது முகவர்கள் மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்களை மோதவிட்டு தம்மை தற்காத்துக் கொள்ளும் அரசியற் காய் நகர்த்தல்களை ஜேஆர் ஜெயவர்தன தனது ஆட்சிகாலத்தில் கட்சிதமாக மேற்கொண்டார்.

இனவெறி அற்ற சனநாயக சிந்தனையுள்ள மனித உரிமைகளை மதிக்கிற அரசியல் தலைவர்கள் இனங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படமுன்னரேயே அவற்றை உணர்ந்து அவற்றை எப்படி சரியாகக் கையாள்வதென்று யோசிப்பார்கள். மாறாக குறுகிய சிந்தனை கொண்டவர்கள் அரசியல் லாபங்களுக்காக அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஒடுக்கப்படும் இனங்களை எவ்வாறு பிரித்து அடக்கியாளலாம் என்று யோசித்து அதற்கு துணை போகக்கூடிய சிறுபான்மையின அரசியல்வாதிகளை விலைக்குவாங்கி தமது அதிகாரதைப்பேண அவர்களைப் பயன் படுத்திக் கொள்வார்கள். ஒடுக்கப்படும் இனங்கள் ஒன்று சேர்வதன் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாதபடி பிளவுகளை உருவாக்குவார்கள்

அந்த வகையில் மன்னாரில் ஏற்பட்ட இந்த நிலமையினை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையில் இரண்டு சிறுபான்மை இனங்களில் வாக்குகள் மூலமாகவே பாராளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டவர் என்ற வகையில் ரிட்சட் பதியுதீன் நிதானமுடன் கையாண்டு இருந்தால் இன நல்லுறவை சிறப்பாக ஏற்படுத்தியிருக்கமுடியும்.

ஆனால் உண்மையில் நீதிமன்றமும் அரச அதிகாரிகளும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர என்ன முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ளாமலே உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்புவரை சென்றிருக்கிறது. இந்த நிலமைகள் குறித்து மன்னார் மக்கள் சிலருடன் இடம்பெற்ற உரையாடல்கள் இவை.

உண்மையிலேயே பிரச்சனை என்னவென்றால், 13 ஆம் திகதி அன்று, கோந்தைப்பிட்டியிலுள்ள தோட்டவெளி ஆட்களுக்கும். முஸ்லிம் ஆட்களுக்கும் இடையில்..... சின்னப்பிரச்சினை ஏற்பட்டு விட்டது. காலையில் தொழிலுக்கு போன தோட்டவெளி மக்களை தொழிலுக்கு போக வேணாம் எண்டு உப்புக்குள மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இவங்கட வாதம் எல்லாம் ஆதாரமற்றது. என்னனெண்டு சொன்னா.. அந்த காணி எல்லாம் அதாவது மீன்பிடிக்க போடுவங்கதானே வாடி... அந்த வாடி போட்டிருக்கிற இடம் உண்மையிலேயே, ஹபார் கோப்ரேஷனுக்கு உரியது. (கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியது)

அப்ப இவங்கள் 2002 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மன்னாருக்கு வந்த போது .., ஆயர் அவர்கள் கிட்டத்தட்ட 10 அல்லது 20 பேர்ச்சஸ் காணியை தோட்ட வெளி என்றொரு இடமிருக்கு அங்க கொடுத்து, அங்கு நிரந்தரமாக வீடு கட்டி இருக்க அனுமதித்திருந்தார். . கிட்டத்தட்ட 2002 இல் இருந்து அந்த இடத்தில் இருந்து அவர்கள் தொழில் செய்கிறாங்கள்.

2006 ஆம் ஆண்டு இவர்கள் ஹாபர் கோப்ரேஷனுக்கு ((கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு) தங்களுக்கு மீன்பிடி இறங்குதுறை இல்லை என்று கோரிக்கை விடுக்கின்றனர். மீன்பிடி உதவி ஆணையாளரும், இவர்களுக்கு நல்ல இடத்தை வழங்குமாறு சொல்லியிருக்கிறார். அப்ப அவங்க வந்து தற்காலிகமாகப் பாஸ் கொடுத்திருக்காங்கள். படகு, இயந்திரம் எல்லாம் வைக்கலாம் என்றும் அவர்கள் அனுமதி கொடுத்திருங்காங்கள். 2006 ஆம் ஆண்டிலிருந்து ஹாபர் கோப்ரரேஷன் லீகலாக இவர்களுக்கு பாஸ் ஒன்று கொடுத்திருக்கு. இந்த நிலையில் அங்கு உப்புகுளத்தை சேர்ந்தவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று படகுகளே இருக்கின்றன. தோட்டவெளி ஆட்கள் படகுகள், வாடிகள் வைத்திருக்கும், இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே உப்புகுளம் மீனவர்களின் படகுகள் மற்றும் வாடிகள் உள்ளன. இதனால் உப்புக்குளம் மீனவர்களுக்கு, தோட்டவெளி மீனவர்கள் படகுகளை தோட்டவெளியில் நிறுத்தி வைப்பதால், எந்த இடையூறும் இல்லை.



எனினும் எதிர்காலத்தில் தமக்கு இடம் வேண்டும் என்பதற்காக உப்புக்குளம் மீனவர்கள் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தினர்.

தோட்டவெளி மக்களிடன் அவர்கள் பயன்படுத்தும் இடம் தொடர்பாக அவங்களிடம் நிலவரைபட திட்டம் உட்பட அனைத்தும் இருக்கின்றன. தோட்டவெளி மீனவர்களுக்கு அந்த இடத்தைப்பயன் படுத்துவதற்குரிய சகல அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இதனால் உப்புக்குளம் மீனவர்கள் அந்த இடம் தங்களுடையது என உரிமை பாராட்ட இடமில்லை.

என்றாலும் இதை வைத்து இனப்பிரச்சினையை கிளப்ப முயற்சிப்பதால் தமக்கு நல்ல இடம் கொடுத்தால் தாம் அங்கிருந்து வெளியேறிச் செல்வதாக தோட்டவெளி மீனவர்கள் தெரிவித்தனர். தீவில் நல்ல இடம் கொடுத்தால் தாம் போவதாகவும் எதற்கு சண்டடை போட வேண்டும் என தோட்டவெளி மக்கள் தெரிவித்தனர். இதற்கு இடையில் 13 ஆம் திகதி அங்கு சென்ற உப்புக்குளம் முஸ்லிம்கள் வாடிகளை உடைத்து விட்டனர். சுமார் 17 வாடிகளை உடைத்து விட்டனர். அதற்குள் இருந்த அந்தோணியார் சிலையை உடைத்து, அனைத்தையும் உடைத்து கடலுக்குள் போட்டு விட்டு சென்று விட்டனர். அவை உடைக்கப்பட்டு 30 நிமிடங்களில் சட்டத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்தனர். கத்தோலிக்க மதகுருமார், தோட்டவெளி மக்கள் உட்பட அனைவரும் அங்கு வந்தனர். இதனையடுத்து உடனடியாகப் பொலீசைஅழைத்துச் சென்றோம். நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்று 13 ஆம் திகதி இந்தச்சம்பவம் தொடர்பாக பொலிசில் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

14-15 சனி- ஞாயிறு என்பதால் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன அதில் ஒன்று இந்த வாடி உடைக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதவான், தோட்டவெளி மக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு மாற்று வழி செய்யும் வரை அவர்களுக்கு எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசிற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட நாள் இரவே முஸ்லிம் மக்கள் இது தமது இடம் எனப்பிரச்சினை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் அது கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு ( ஹாபார் கோப்ரரேஷனுக்கு) சொந்தமான இடம்.



இதன் பின்னர், 17 ஆம் திகதி மன்னார் பொலிஸார் இந்தப் பிரதேசங்களுக்குச் சென்று இரண்டு தரப்பினருக்கும் இடையில் பொது பிரச்சினை ஒன்று வரப்போகிறது எனவே இரண்டு தரப்பும் சண்டையிட்டு, ஒரு கலவரம் வருவதை முன் கூட்டியே தடுக்கும் நோக்கத்துடன் 106 ஆம் இலக்கத்தின் கீழான பீ அறிக்கையை தோட்டவெளியை சேர்ந்த 5 பேருக்கு எதிராகவும் உப்புக்குளத்தை சேர்ந்த 5 பேருக்கு எதிராகவும் பதிவுசெய்தனர் .

இதன்படி 17 திகதி இரு தரப்பினருக்கும் எதிராகப் பொலிசார் வழக்குத்தாக்கல் செய்தனர்.. உப்புக்குளம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதை அறிந்தே பொலிஸார் இந்தப் பீ அறிக்கையை கொண்டு வந்தனர். ஆனால் அப்படியொரு தடையுத்தரவு தேவையில்லை என நீதவான தெரிவித்தார். இரண்டு தரப்பினருக்கும் அறிக்கையை வழங்குங்கள் எனக் கூறியதை அடுத்து, காவற்துறையினர் அறிக்கையை வழங்கினர். இவ்வாறான பிரச்சினை ஏற்பட போகிறது என காவற்துறையினர் அவசரப்பட்டு தடையுத்தரவைக் கோரினர், எனினும் அதற்கு பதிலளித்த நீதவான், அவர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை ச்செய்வதை தடுப்பது நீதிமன்றத்திற்கு அழகல்ல ஆனால் ஏனையோருக்கு இடையூறு இல்லாமல், அவர்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யலாம் என அனுமதியை வழங்கினார்.

(இங்கு நினைவுகூர வேண்டிய விடையம் என்னவெனில் யாழ்ப்பாணத்திலேயே ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது)

இதனையடுத்து அதற்கு முன்தினம் 17 ஆம் திகதியே பொலிஸார் வழக்கு குறித்த அழைப்பாணைகளுடன் சென்றனர். கோரிக்கையாளர்களான முதலாம் தரப்பாக தோட்டவெளி மக்கள், இரண்டாம் தரப்பாக உப்புக்குள மக்கள், மூன்றாம் தரப்பாக, அரச அதிபரையும், மேலதிக அரச அதிபரையும் பொலிசார் குறிப்பிட்டு இருந்தனர். 18 ஆம் திகதி வழக்குக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தோட்டவெளி மக்கள் அழைப்பாணையை (சம்மனை) பெற்றுக்கொண்டு விட்டனர். அரச அதிபரும், மேலதிக அரச அதிபரும் அதனை ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் உப்புக்குளம் மக்கள் அழைப்பாணையை (சம்மனை) பெறப் போவதில்லை என நிராகரித்து, போலிஸாரை திருப்பி அனுப்பி விட்டனர்.

சம்மனை பெறாதவர்கள் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானார். அவரை கொழும்பில் இருந்து அமைச்சர் ரிஸாத்பதியுதீன் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபரிடமும், தோட்டவெளி மக்கள் அந்த இடத்தை விட்டு போவதாக தெரிவித்திருந்தனர்.

அந்த மக்களுக்கு மன்னார் தீவில், படகுகளை நிறுத்தி, வாடிகளை அமைத்து, தொழில் செய்ய 100 முதல் 200 மீற்றர் இடம்ஒன்றை வழங்க முடியுமா என நீதவான் பகிரங்கமாக கேட்டார். இதற்கு இரண்டு வார காலம் போதுமா என நீதவான் அரச அதிபரிடம் கேட்டார். இடத்தை அடையாளம் காண வேண்டும் என்பதால், மூன்று வார காலம் அவகாசத்தை அரச அதிபர் கோரினார்.



நில அளவை திணைக்களம் வழங்கிய வரைபடம்-

18 ஆம் திகதி அன்று முதலாவதாக இந்த வழக்கே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் இவை நடந்து கொண்டிருக்கின்ற போது, சம்மனை பெறாதவர்களும், உப்புக்குளம் மக்களும் அனைவரும் சேர்ந்து, காலை மன்னார் நகரில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஒன்று கூடினர். நீதவான் ஜூட்சனுக்கு எதிராகவும் அவரின் தீர்ப்புக் எதிராகவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது என்பதை நீதிமன்றமோ, சட்டத்தரணிகளோ காலையில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர், தோட்டவெளி மக்கள் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாதித்து கொண்டிருந்தனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், தமிழ் மக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், அவர்கள் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போடும் சத்தம் நீதிமன்றத்திற்கு கேட்டது. அவர்கள் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என தெரிவித்து, நீதவானும், ஆர்ப்பாட்டத்தை கலைக்க கோரவில்லை.

இந்த வழக்கு முடிந்து அவர்களின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர். இதன் பின்னர் சுமார் 11 மணி முதல் 11.30 வரையான நேரத்தில் ஆர்ப்பாட்டத்தின் சத்தம் அதிகமாக கேட்டது. ஆர்ப்பாட்டம் அது ஆரம்பித்த இடத்தை விட்டு நகர்ந்து நீதிமன்றத்திற்கு அருகாமையில் வந்து விட்டது.

நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்தவாறு,நீதவானை "நாயே வெளியேறு! உன்னை வெட்ட வேண்டும்!! கொத்த வேண்டும். முல்லைத்தீவான், உன்ரை தீர்ப்பால் நாங்கள், மன்னார் முஸ்லிம்கள் எல்லோரும் வெளியேறுகிறோம். இது ஒரு பக்கசார்பான தீர்ப்பு" என கோஷமிட்டதுடன் நாய் படம் ஒன்றில் நீதவானின் பெயரும் எழுதியிருந்தது. அப்போதும் வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன. சட்டத்தரணிகள் சிலர் வெளியில் சென்று பார்த்த போதுதான் இவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதனையடுத்து, முஸ்லீம் மக்களின் சட்டத்தரணிகளை அழைத்து, சட்டத்தரணி சம்சூதீன் என்பவர் இருந்தார், சட்டத்தரணி சபீர் என்பவர் போய்விட்டார் நீதவானுக்கு எதிராகதான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது இதனை நிறுத்த வேண்டும என அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தோட்டவெளி மக்கள் அங்கிருந்து செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் அவர்களுக்கான காணி இனங்காணப்படும், அதுவரையில் மீன்பிடியில் ஈடுபட்ட அந்த மக்களுக்கு எந்த தடையுமில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறுங்கள் என அவர்களின் சட்டத்தரணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. காரணம் நீதிமன்றத்திற்குள் என்ன நடந்தது என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் பிறகு உப்புக்குள ஆட்களை அங்கு எடுக்கலாம். கிட்டதட்ட 10வருடங்களுக்கு மேலாகத் தோட்டவெளியில் தொழில் செய்து கொண்டிருந்த இருந்த மக்களுக்கு மூன்று வாரகால அவகாசம் வழங்கலாம் தானே என்றெல்லாம் உப்புவெளி மக்களிடம் மன்றாட்டமாக கேட்கப்பட்டது.

ஆனால் அமைச்சர் ரிசாத்பதியுதீனின் நேரடி ஆதரவாளர்களான இளைஞர்களே ஆர்ப்பாட்டத்தில் அதிகமாக துள்ளிக்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பெண்கள் உட்பட 75 வீதமானவர்களுக்கு தாம் எதுக்கு சென்றோம் என்றுக் கூட தெரியாது. அவர்களிடம் பெனர்கள் எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதனை ஏந்திக்கொண்டிருந்தனரே தவிர அவர்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது.

ஆனால் 18 ஆம் திகதி நீதவான் ஜூட்சனை இடையில் மறிக்க உள்ளதாக முதல் நாள் தகவல் கிடைத்திருந்தது. பங்களாவில் இருந்து நீதிமன்றத்திற்கு போகும் வழியில், சிறிது தூரத்தில் அவரது பங்களா உள்ளது. மக்களைத் திரட்டிச் சென்று நீதவான் நீதிமன்றம் செல்லும் போது வழி மறித்துப் பிரச்சினையை ஏற்படுத்த இருந்ததாகதான் தகவல்கள் கிடைத்திருந்தன. இதனை முதல் நாள் கேள்விப்பட்ட நீதவான் போலிஸ் பாதுகாப்புடன்தான் சென்றார். இதனால் காலையில் அவர்கள் எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு பிறகுதான் எல்லாப் பிரச்சினையும் ஏற்பட்டது.

தோட்டவெளி மக்களுக்கு வேறு காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டால் அவர்கள் சென்று விடுவார்கள் என்பது குறித்து பேசத்தான் சட்டத்தரணிகளும் சென்றிருந்தனர். அதனைதான் நீதவானும் கூறினார், இந்த பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது, இரண்டு சமூகங்கள் இருக்கின்ற இடம், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நீதவான் பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு தரப்பும் சமாதானமாக இருங்கள் எனக் கூறினார். அரச அதிபர் தகுந்த இடத்தை பெற்றுக்கொடுத்தால், அதற்கு பிறகு அடம்பித்து கொண்டிருக்கலாமல், நீங்கள் போய்விட வேண்டும் என நீதவான் தோட்டவெளி மக்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கம் தெரிவித்தனர்.


எங்கள் தொழில் மீன்பிடிப்பதுதானே நிலம் பிடிப்பதல்ல. எங்களுக்கு அதற்கு இடம்கிடைத்தால் சென்று விடுவோம் எனக் கூறினார்கள். தோட்டவெளி ஆக்கள், கோந்தப்பிட்டியில் வாடிகளை வைத்திருந்தாலும் , அவர்களின் சொந்தஇடம் விடத்தல்தீவு. வாடிகளை இங்கு வைத்து கொண்டு விடத்தல் தீவுக்கு சென்றுதான் மீன்பிடித்து விட்டு வருகின்றனர். அவர்கள் உப்புக்குளத்தில் மீன்பிடிக்கவில்லை. அவர்கள் எந்த விதத்திலும் உப்புக்குள மக்களின் மீன்பிடியிலும் தடை ஏற்படுத்தவில்லை. விடத்தல் தீவில் இருந்து சென்று படகுகளை தோட்டவெளியில் கட்டிவிட்டுப் போய்விடுவார்கள், இரவில் மாத்திரம் படகுகள் அங்கு இருக்கும் காலையில் மீண்டும் தொழிலுக்கு செல்லும் போது படகுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். இதுதான் பிரச்சினை எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறுங்கள் எனச் சட்டத்தரணி சபீரிடம் தமிழ்ச் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இச்சட்டத்தரணிகள் அந்த தகவலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்களோ என்னவென்று தெரியவில்லை. 11 .45 அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் சத்தம் அதிகமாக கேட்க தொடங்கியது. நீதிமன்றத்திற்குள் நுழையும் முயற்சியில் தான் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். போலிஸார் விட்டிருந்தால், நீதிமன்றத்திற்குள் நுழைந்து அனைத்தையும் உடைப்பதற்காக அவர்கள் தயாராக இருந்தனர். இதனையடுத்து நீதிமன்ற பணிகளை இடைநிறுத்துமாறு சட்டத்தரணிகள் சிலர் சென்று நீதவானிடம் கோரினர்.

அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் நீதவானுக்கு எதிராக நடைபெறுகிறது என்பதை அதுவரை அவர் அறிந்திருக்கவில்லை. உங்களுக்கு எதிராகதான் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உங்கட படத்தில் நாய் என எழுதப்பட்டுள்ளது. நீங்கள் வெளியில் வந்தால் வெட்டுவேன் கொத்துவேன் என்று கூறுகிறார்கள் என சட்டத்தரணிகள் நீதவானிடம் கூறினர். ஏதோ ஜனநாயக ரீதியாகதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதவான் நினைத்திருந்தார். சட்டத்தரணிகளும் தோட்டவெளி மக்களுக்கு எதிராகதான் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்று கருதினர்.

அதன் பின்னர் நீதிமன்றப் பணிகளை நிறுத்தி விட்டு காவற்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது போலிஸ் அத்தியட்சகர், உதவி போலிஸ் அத்தியட்சகர் இருந்தனர். நீதவான் போலிஸ் அதிகாரிகளை அழைத்து தனது படத்தை வைத்து, தீர்ப்பு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் கூட்டத்தை கலைத்து விடுமாறு அவர்களிடம் கூறினார். ஆர்ப்பாட்டகார்களை சத்தம் போட வேண்டாம் எனக் கூறியிருப்பார்கள், ஆனால் போலிஸார் அவர்களை கலைக்கவில்லை. மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிக கோஷங்களை எழுப்பி நீதிமன்றத்திற்குள் செல்ல முயற்சித்ததாகவும் காவற்துறையினரும் அவர்களை கலைக்க வில்லை என நீதவானிடம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும், காவற்துறை அதிகாரிகளை நீதவான் அழைத்தார். ஆர்ப்பாட்டகார்களை கலைக்குமாறு கூறியதுடன் போக மறுத்தால், பலத்தை பிரயோகிக்குமாறு கூறினார். இதுதான் உண்மையில் நடந்தது. அங்கிருந்து கூடடத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளையாவது பயன்படுத்துங்கள் எனக் கூறினார். போலிஸ் சென்று அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டகார்கள் கலைந்து செல்லவில்லை அங்கேயே நின்றனர். சத்தம் அதிகமாகவே இருந்தது. அதன் பின்னர், ஒரு கட்டத்தில் போலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். சுமார் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. கண்ணீர் புகைக் குண்டு வீசியவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓடினர்.

மீண்டும் 10 நிமிடங்களில் ஓடி போனவர்களில் சுமார் 30 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் இந்த வன்முறைகள் நடந்தன. அவர்கள் சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பின்னர், நீதவான் நீதிமன்றத்திற்குள் இருக்க முடியவில்லை அவ்வாறு சத்தம் இருந்தது. கற்களை வீசுகின்றனர். போலிஸார் காயமடைந்தனர். அப்போதுதான் நீதவான் வெளியில் சென்றார். அவர் வெளியில் சென்றவுடன் வா அடி படுவோம் வாடா என நீதவானை அழைத்ததனர்.

அப்போது பிரச்சினைக்கு உரியவர்களான ஒரு சிறிய தரப்பினரே அங்கு இருந்தனர். மீதமிருந்த பெண்கள் உட்பட அனைவரும் ஓடி விட்டனர். மீதமுள்ளவர்களை கைதுசெய்யுங்கள் முடியாவிட்டால், காலின் கீழ் சுட்டாவது கைதுசெய்யுங்கள் என நீதவான் போலிஸாருக்கு உத்தரவிட்டார். இவர்கள் இப்படி கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அதனை தடுக்க நீதவானுக்கு சட்டத்தில் அதிகாரம் உண்டு. அத்துடன் காலை 9.30 மணி முதல் 12.30 வரை போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. நீதவான் 3 தடவைகள் உத்தரவிட்ட பின்னரும், போலிஸார் அமைதியாக இருந்தனர் காரணம் அமைச்சர் ரிஸாதத்பதியுதீனின் உத்தரவுகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர்.

ஆர்ப்பாட்டகார்கள் தொடர்ந்தும் கல்லெறிந்து கொண்டிருந்தனர். மீண்டும் அவர்களை கலைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இல்லையெனில் மேலதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என நீதவான் கூறினார். தீர்ப்புக்கு எதிராக இப்படி செய்ய முடியாது. அவர்களை உடனடியாக கலைக்குமாறு கூறினார். மறுபடியும் கண்ணீர் புகைக்குண்டுகளை பொலிசார் வீசினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய பின்னர், அவர்கள் கல்லெறிந்தனர், ஒடினர், இவர்களில் ஓரிரு காவற்துறையினருக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகார்கள் ஒடுவதும் வருவதுமாக இருந்தனர். கண்ணீர் புகைக்குண்டு வீசு போது ஒடுவதும் வருவதுமாக இருந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த குழுவை அடக்க முடியாது போனது.

பின்னர் தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து பிரிகேடியர் டயஸ் என்பவர் அங்கு பிரசன்னமானார். அவர் நீதவானிடம் சென்ற போது, நீதவான் பிரச்சினை தெளிவுப்படுத்தினார். மேலிடத்தில் இருந்து துப்பாக்கி பிரயோக உத்தரவு வரும் வரை அவர்கள் சுமார் 10 நிமிடம் வரை காத்திருந்தனர். பின்னர், உத்தரவு கிடைத்தது. அதற்குள் போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீச அவர்கள் பின்புறமாக உப்புக்குளத்திற்கு ஓடிவிட்டனர். பள்ளி முனை என்றும் கூறும் வீதி வழியாகதான் பின்புறமாக உப்புக்குளத்திற்கு செல்ல வேண்டும். அந்த பகுதியின் கரையோரம்தான் நீதிமன்றத்தின் பின்புறம் வருகிறது.

புதிய நீதிமன்றம் அங்குதான் கட்டப்பட்டுள்ளது. ஓடிய இளைஞர்கள், தாம் கொண்டு சென்ற கருங்கற்கள், போத்தல்களைக் கொண்டு, நீதிமன்றக் கட்டம், நீதிபதிகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிபதிகள் தங்கும் இடங்கள் எல்லாம் கற்வீச்சு தாக்குதலில் உடைப்பட்டு விட்டன. எல்லாம் பெரிய பெரிய கற்கள். வாகனங்களை தாக்கியுள்ளனர். இடையில் டயர்களை எரியூட்டினர். பெட்ரோல் குண்டோ எதுவோ என்று தெரியவில்லை, அதனை வீசி எறிந்தனர் அது எரிந்துக்கொண்டிருந்தது. அங்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அதனை அனைத்துவெளியில் போட்டு விட்டனர், இல்லாவிட்டால் எரிந்து, நீதிமன்றத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்திருக்கும்.

போலிஸார் சென்றதும் இளைஞர்கள் ஓடிவிட்டனர். அவர்களின் பள்ளி வாசலுக்கு போகும் வழியொன்று உள்ளது, அங்கிருந்து மீண்டும் கல்லெறிந்து கொண்டிருந்தனர். காலுக்கு கீழ் சுட அல்லது கைதுசெய்ய சுடும் அனுமதியை பெற்ற இராணுவத்தின் பிரிகேடியர் தமது ஆட்களை அந்த இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.. இராணுவத்தினர் அணியாக போய்கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள், அவர்களிடம் சென்று கூட்டத்தை கலைத்து விடுவதாகவும் 5 நிமிடம் தருமாறும் பிரிகேடியர் டயஸிடம் கேட்டுள்ளனர்.

ஊரில் இளைஞர்கள் முன்னால் நிற்க பெண்கள் சிறுவர்கள் பின்னால் நின்றுக்கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் பணியாற்றும் முதலியார் மற்றும் இன்னுமொருவர் இருவரும் முஸ்லிமகள். அவர்கள் போய் மீண்டும் கல்லெறிந்தால் படையினர் சுடுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். அப்போதும் அவர்கள் மதில் கரையில் மறைந்து இருந்து கொண்டு கல்லெறிவதுமாக இருந்தனர். பின்னர் இராணுவம் நடந்து போக வெளிகிட அவர்கள் ஓடிவிட்டனர். அதன் பின்னர், அந்த கூட்டம் கலைந்து போய்விட்டது. இதுதான் உண்மையில் நடந்த பிரச்சினை.

அன்று நடந்த பிரச்சினையில் உண்மையில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு தொடர்பில்லை. அமைச்சர் ரிஸாத்பதியுதீனின் ஆதரவாளர்கள் சிலரே திட்டமிட்டு இதனை உருவாக்கினர். நீதவானிடம் முதலிலிலேயே மன்னார் பற்றி எரியும் என அமைச்சர் கூறியிருக்கிறாரே.

அவர்கள் கொண்டு வந்த கற்களைப் பார்த்தீர்கள் என்றால் கலவரத்தை ஏற்படுத்துவதற்கென்றே கொண்டு வந்திருக்க வேண்டும்என்பது தெரியும் . இந்த செய்திகள் இப்படி இருக்க இலங்கை அரச தொலைக்காட்சிகள் முதலில் பெண்கள் உட்பட சிறுவர்கள் பெனர்களை பிடித்து கொண்டிருப்பதைக் காட்டி விட்டு நீதவான் வெளியில் வந்து கையை காட்டி பேசுவதையும், அவர் சுட சொன்னது போலவும் ஒரு பகுதியைக்காட்டியது. அரச தொலைக்காட்சிகள் பின்னால் மதகுமார் நிற்பதையும் வன்னியில் இருந்து மன்னார் வந்து செல்ல முடியாது தேங்கி இருந்தவர்களையும் படமெடுத்துத் தொகுத்துக் காட்டின. கத்தோலிக்க குருமாரும் நீதவானும் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சும்மா சுடுமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் புனைந்துள்ளனர்.

இங்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சவால் விடுகிறோம்? மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகள் சுமார் 45 நிமிடம் வரையான வீடியோ காட்சியாக உள்ளன அவற்றை இலங்கைத் தொலைக்காட்சிகள் ஊடாக மக்களுக்கு எந்தத் தணிக்கை யும் இல்லாமல் வெளியிடுவீர்களா?

ஆனால் உண்மையில் நடந்தது இதுதான். 9.30 இல் இருந்து 11.30 வரையும் நீதவான் எதனையும் செய்யவில்லை. போலிஸார் கூட்டத்தை கலைக்க முடியாமல் போய், கண்ணீர் புகைக்குண்டு வீசி, அவர்கள் கலைந்து சென்று, மீண்டும் அவர்கள் திரும்பி வந்த போதே நீதவான் வெளியில் சென்றார். வெளியில் சென்றுதான் இந்த விடயத்தை கூறினார். ஆனால் இவர்கள் சும்மா வெளியில் இருந்தவர்கள் மீது நீதவான் உத்தரவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகின்றனர். உண்மையில் அங்கிருந்தவர்களில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இருக்கவில்லை. சம்பவத்தை திட்டமிட்டு செயற்படுத்தியவர்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாததால், தற்போது அனைவரும் இணைந்து இதனைத் தமிழ், முஸ்லிம் பிரச்சினை என மாற்ற முனைகின்றனர்.

மன்னார் ஆயரும், நீதவானும் இணைந்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடைசெய்வதாக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது நடந்த பிரச்சினை அதுவல்ல. இந்த நீதவான், மீள்குடியேறிவர்களில் எவரையும் மீள்குடியேற வேண்டாம் எனக் கூறவில்லை அவ்வாறு நீதவான் கூறியதாக நிரூபித்தால் சட்டத்தரணிங்கள் சங்கத்தில் இருந்து விலகுகிறேன் என ஒரு சட்டத்தரணி அன்றைக்கு கேட்டதையும் நான் பார்த்தன் . முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் குடியேற நீதவான் எதிர்ப்பு தெரிவிப்பரானால், அதற்கு தான் எதிராக குரல் கொடுப்பேன் என அவர் கூறியிருக்கிறார்.

இந்த நீதவானைப்பற்றி இன்னுமொன்றையும் கூறவேண்டும். யுத்தம் நடந்து கொண்டிருந்தகாலத்தில் முஸ்லிம் பொதுமகன் ஒருவரை இனம் தெரியாதவர்கள் கடத்தி விட்டனர், கடத்தியவரின் பெற்றோர் கடற்படையினர்தான் அவரை கடத்தியதாக நீதிமன்றத்திற்கு சென்று தெரிவித்தனர். அப்போது நீதவான் ஜூட்சன், கடற்படையினரை அழைத்து அவர்களால் தனக்கு வரக்கூடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது. அவர்கள்அவ்வாறு எவரையும் கடத்தினார்களா என நேரடியாக விசாரித்தார். அப்போது அவருக்கு அதனால் அச்சுறுத்தல் இருந்தது. அந்த யுத்தகாலத்தில் படையினரை எதிர்தால் கிளைமோர் வைத்துத் தாக்கி விட்டு, விடுதலைப்புலிகள் தான் தாக்கினார்கள் எனக் கூறிவிடுவார். அந்த நிலையிலும் துணிந்து தனது நீதித்துறையின் கடமையை இந்த மக்களுக்கு இந்த நீதவான் செய்திருக்கிறார். அவரை ஒரு பக்கசார்பானவர் என்று கூறுகிறீர்களே, முஸ்லீம்களை மன்னார் மாவட்டத்தில் வந்து குடியேற வேண்டாம் என நீதவான் தடைபோட்டாரா எனக் கேட்கப்பட்ட போது அங்கு நின்ற முஸ்லீம் பெரியவர்கள் மௌனித்திருந்திருக்கிறார்கள். அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

மன்னார் உரையாடல் 2

காபர் கோப்பரேசனில் 83 களிற்கு பின்பு ரெலோ அமைப்பு முகாம் போட்டு இருந்த இடம். அதன் பிறகு நீண்ட காலமாக 90 களிற்கு பிறகு ராணுவம் பொறுப்பெடுத்தது. பின்பு 2002 ஒப்பந்தத்திற்குப் பிறகு 99ஆம் ஆண்டு 6ம் மாதம் 27ம்திகதி ரணஓசை ராணுவ நடவடிக்கைகளின் போது விடத்தல் தீவிலிருந்து தோட்டவெளிக்கு சென்ற மக்களுக்கு 2002ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டதுதான் அந்த இடம். புலிகளின் நிர்வாகம் மன்னாரில் இருக்கின்ற போது புலிகள் கதைத்துத்தான் அது கொடுக்கப்பட்டது.

உண்மையிலேயே அது முஸ்லிம் மீனவர்களுக்கு சொந்தமானது என நிரூபிக்க முடியாதது.

  இரண்டாவதாக முஸ்லிம் மீனவர்கள் ஒரு 6 பேர் அட்டை பிடிப்பதற்காக மட்டும் போனதே தவிர அவர்களிடம் வள்ளமோ, வலையோ எந்தவிதமான அடிப்படை வசதிகளோ இல்லை. பிஷப்பிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை றிசாத் பதியுதீன் எடுத்ததற்கு மன்னார் சமூகம் ஒரு எதிர்ப்பு செய்ததல்லவோ. அந்த விடயத்திற்கு எதிரொலியாக இந்த விடயம் கையிலெடுக்கப்பட்டதே ஒழிய இதில் வேறு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

இப்பவும் அங்கு கோந்தைப்பிட்டியில் காவல் நிலையமும், புலனாய்வுப்பிரிவினரின் அலுவலகங்கள் எல்லாம் அதற்குள்ளேயே இருக்கின்றது. கோந்தைப்பிட்டியில் புலிகளின் அழிவிற்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டது என்பதே உண்மை.

அந்தக் காணி சட்டவிரோதமாக அமைச்சரால் கிராம சேவையாளருக்கு உத்தரவிடப்பட்டு மன்னாரிலுள்ள பிரதான கோட்டைக் அருகிலுள்ள காணியில் சட்டவிரோதமாக ஒரு 3 வருடத்துகட்குள் இந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கோந்தைப்பிட்டி சொந்தமில்லை. துறைக்கு சண்டை பிடிப்பது உப்புக்குள மீனவர்கள். உப்புக்குளத்தில் ஏற்கனவே முஸ்லிம் மக்கள் இருந்தவர்கள். 91, 92 இலிருந்தே இருக்கின்றார்கள். உப்புக்குளத்தில் குடியேறவில்லை. கோந்தைப்பிட்டியில்தான் ஒரு பகுதி மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினது. உப்புக்குளத்தில் உள்ள மக்கள் திருமணம் முடித்து பிள்ளைகள் என வந்ததால் அங்க காணி இல்லாத ஆட்களுக்கு வீடு கொடுத்ததே தவிர அதில இருக்கிறவர்கள் எல்லாம் கடற் தொழிலாளர்கள் அல்ல. மன்னரில் முஸ்லிம் மக்கள் கடற்தொழில் செய்பவர் நூற்றுக்கு 2 வீதம் கூட இல்லை.

மற்றது இதில் இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால் இந்த காபர் கோபரேசனின் காணி எனத் தெரிந்தததற்குப் பிறகு அந்த மக்கள் அவர்களிடம் கடிதம் வாங்கிக் கொண்டு வந்ததற்குப் பிறகு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். காபர் கோப்பரேசனுக்குரிய காணி என்றதும அதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அதோடு பிரச்சனை தொடங்கிவிட்டது. அதோடு சேர்த்து பிஷப்பினுடைய பிரச்சனையும் வந்து விட்டது.

ஒரு விசயம். மருதானைக்கு மன்னாரிலிருந்து 12 பஸ்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்த்தான் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். வவுனியா, மட்டக்களப்பு, காத்தான்குடி, யாழ்ப்பாணம் எல்லாப் பகுதிகளிலும் இருக்கினம். வடபகுதி மக்களை மீள்குடியேற்ற வேண்டுமென்று. மன்னாரில் மீள்குடியேறாமல் எந்த முஸ்லிம் இருக்கின்றார். அதற்கொரு பதில் வேணும் எங்களுக்கு. வழக்கைத் திசை திருப்புவதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். அரசாங்கம் இதற்கு பதில் சொல்லாமல் ஏன்பார்த்துக் கொண்டிருக்குதென்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட 67 ஆயிரம் முஸ்லிம் மக்கள் மீளகுடியேறியிருக்கின்றார்கள். அத்தனை மக்களும் மீள்குடியேறி சகல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு மீண்டும் போய் புத்தளத்தில் இருக்கினம்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன். ஐசிஆர்சி கொடுத்த லாண்டமாஸ்ரர் வந்தது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு என்று கொடுக்கப்பட்டது. இதில் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் கொடுத்தாச்சுது. மன்னாருக்கு என சென்றது 342. இதற்குரிய பட்டியல் இட்டவர் ஏசிஏ. முசலியில் உள்ள 162 தனிப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க வேணுமென அமைச்சர் பிரச்சனைப்பட்டு கடைசியில் ஐசிஆர் வரை போய் 01 லாண்ட மாஸ்ரர் கூட மன்னார்ப்பகுதிக்கு கொடுக்காமல் முழுவதையும் பாகிஸ்தானுக்கு ஐசிஆர்சிஅனுப்பி விட்டது.

அதேபோல இந்தியா அனுப்பிய அவ்வளவு சைக்கிள்களும் முஸ்லிம் மக்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதைவிட அரபு நாடுகளில் இருந்து குறிப்பாக சவூதியிலிருந்து வீட்டுத்திட்டம் அத்தனையும் முஸ்லிம் மக்களுக்கே வழங்கப்பட்டது.

அதோடு முஸலிம் எயிட் என்ற முஸ்லிம் NGO அமைப்பு இயங்குது. அதன் மூலமும் அனைத்து வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கே கட்டிக் கொடுக்கப்பட்டது. வருகிற எதுவித உதவியென்றாலும் முஸ்லிம் மக்களுக்கே 90 வீதம் போகிறது. அவர்கள் புத்தளத்தில் இருந்து வந்து உதவியைப் பெற்றுக் கொண்டு போகினம். முஸ்லிம் மக்களுக்கு விவசாய பகுதி என தனியாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்குது.

இந்திய அரசாங்கம் 272 ஆட்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொடுத்தது ஒரு ஆளுக்கு 5லட்சம் பெறுமதியானது. வெறும் 9 பேருக்குத்தான் தமிழ் மக்களுக்கு கொடுபட்டிருக்குது. அத்தனையும் முஸ்லிம் மக்களுக்கே கொடுபட்டிருக்குது. தனக்கு ஒத்துழைக்கவில்லை என அரச அதிபர் நிக்கலஸ்பிள்ளை மாற்றப்பட்டார். காணி அபகரிப்புக்கு இடம் கொடுக்கேல்லை என மாந்தைப்பகுதியிலுள்ள பிரபாகரன் என்ற கிராமசேவையாளர் தெல்லிப்பளைக்கு மாற்றப்பட்டார். தனக்கு இஸ்டமான ஆட்களுக்கு ஏடி போஸ்ற் கொடுக்கேல்லை அதிபராக போடவில்லை என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி உடனடியாக மாற்றப்பட்டார்.

தனக்கு குளங் கட்டித் தரவில்லை என உடனடியாக ACAD திருமதி சிவலிங்கம் உடனடியாக மாற்றப்பட்டார். இவ்வளவையும் செய்து போட்டு இப்ப கச்சேரியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இங்கிருந்த சிரேஸ்ட உதவி அரச அதிபர் திருமதி மோகனாதனை வவுனியாவிற்கு மாற்றி தனக்கு ஏற்ற மாதிரி மன்னார் DS திருமதி ஸ்ரான்லி டிமலை உடனடியாக ஓடர் கொடுக்கப்பட்டிருக்கு assistant GA ஆக போடுவதற்கு.

இவ்வளத்தையும் செய்து கொண்டு புலி என்று சொன்னால் இலங்கையின் நீதவான் புலியா? மன்னாரில் புலிகள் மீள்குடியேற்றத்தை செய்கிறார்கள் என்றால் இலங்கையின் நீதவான் புலியா?

இரண்டாவது புலிகளோடு இருந்து ஆள் பிடிச்சுக் கொடுத்த ஆட்கள், புலிகளை தவறாக வழநடத்திய ஆட்கள் அத்தனை பேரும் இன்று றிசாத்தோடு நிற்கிறார்கள். புலிகளை இந்தளவிற்கு கேவலமான நிலைக்கு கொண்டு போன அத்தனை பேரும் றிசாத்தோடு நிற்கிறார்கள். அப்ப யார் புலியை வைச்சிருக்கிறது.


ஆடம்பன் பிரதேசத்தில் இருக்கின்ற செ....பு, அவர் புலிகளின் காத்திருந்த கடற்கரை, எல்லைக்கற்கள் போன்றபடங்களில் நடித்தவர். மற்றது ரா.... மாஸ்ரர், நானாட்டானில் ம.... மாஸ்ரர், செ......ளை, அதிபராக இருக்கின்ற ப......, இவர்கள் மிக முக்கியமான ஆட்கள். இன்னும் கனபேர் இருக்கினம். இவை புலியிடம் நலன் பெற்று புலியால் வாழ்ந்த ஆட்கள். புலியை மன்னாரில் தவறாக வழிகாட்டிய ஆட்கள் இவன்கள்தான். இவர்களை வைத்துக் மிக அருகிலேயே யார் வைத்திருக்கிறார்கள்.

மற்றது தடுப்பிலிருந்து விடுபட்ட ஆட்கள். தடுப்பில இல்லாமல் விட்ட ஆட்கள் எல்லாரையும் வைச்சுக் கொண்டு யாரைப் புலி யாரை புலியின் மறுபிறப்பென்று என்று சொல்லுறது.


வேடிக்கையாக இருக்குது என்னவென்னறால் அந்த நீதிமன்றப் போராட்டத்தின்போது நீதிபதியை சுலோக அட்டையில் தூஷணத்தால் எழுதி வைத்திருந்தவர்கள், நீதிபதியை கேவலாக எழுதி வைத்து போராட்டம் செய்தது.

அதைவிட 4 மாதத்திற்கு முன் இன்னுமொரு சம்பவம் நடந்தது என்னவென்றால் குற்றவாளிகளை; பொலிஸார் பிடித்துக் கொண்டு போய வைத்திருக்க பொலிஸ் விட மாட்டம் என்று சொல்ல மேவின் சில்வா மாதிரி பொலிஸ் ஸ்ரேசனுக்குள் போய் பொலிஸாருடன் மோதி அவர்களை இழுத்துக் கொண்டு போனார்கள். அந்த நேரம் பத்திரிகைகளில் எல்லாம் வந்தது.


மன்னாரில் எவ்வளவு appointment கொடுத்திருக்கு. அவ்வளவும் நூற்றுக்கு நூறு முஸ்லிம் மக்களுக்கு. ARP ஒன்று கொடுத்திருக்கு. 53 பேர் 53 பேரும் முஸ்லிம் ஆட்கள். அதற்கு application போட்ட 1300 பேரில் மிகுதிப் பேர் காத்திருக்கிறான்கள்.

இவ்வளவு அடாவடித்தனங்களையும் செய்து கொண்டு கொஞ்ச காணியை பிடிச்சு வைச்சிருக்கிறார்கள். இதற்கு பிஷப்பை சொன்னால் பிஷப் அரசாங்க அதிகாரியா? என்றெல்லாம் அந்த உரையாடலில் கேட்கப்பட்டது.

இன்னும் சில உரையாடல்கள் விடயங்கள் கட்டுரையின் நீண்டு செல்லும் தன்மை கருதி நீக்கப்பட்டு இருக்கிறது.

மன்னாரில் நடந்தவை நடக்கின்றவை முஸ்லீம் மக்களுக்கு எதிரானவை எனக் குற்றம்சாட்டுபவர்களிடம் பின்வரும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன :

1) பிரச்சனைக்கு உரிய கோந்தைப்பிட்டி வலைப்பாடு அதாவது வாடிவீடுகள் அமைக்கப்பட்ட காணி கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியதா இல்லையா?

2) இந்தக் காணியை 2006ல் தற்காலிக பாவனைக்கு என எழுத்து மூல அரசாங்க அனுமதியுடன் கப்பல் கூட்டுத்தாபனம் விடத்தல் தீவு மக்களுக்கு வழங்கிதற்கான ஆதாரம் உள்ளதை எவ்வாறு புரிகிறீர்கள்?

3) விடுதலைப் புலிகளின் காலத்தில் அமுதன் முஸ்லீம்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் இந்தப் பகுதி அவர்களுடையது என கூறியதனை ஏற்றுக் கொண்டால் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அல்லது உடன்பாடுகள் சட்ட அந்தஸ்த்து உடையவை என்று பொருள்படும் …ஏற்றுக் கொள்கிறீர்களா?

4) அரசாங்கத்தின் கப்பற் கூட்டுத் தாபனக் காணியை புலிகள் உங்களுக்கு உரியது எனக் கூறியதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா? அரசாங்க அதிகாரிகள் குறிப்பாக அப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்த அஸங்க அபயகுணசேகர கொடுத்த அத்தாட்சிக் கடிதத்திற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா?

5) இந்தக் காணியின் பயன்பாட்டுக்கு உரிய அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தும் 3 வாரத்தில் தமக்குரிய இடம் ஒதுக்கப்பட்ட பின் அங்கிருந்து வெளியேற முடியும் என நீதிமன்றிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் விடத்தல் தீவு மக்கள் வாக்குறுதியை வழங்கியபின்னும் அவர்களது வாடி வீடுகளை அடித்து உடைத்து அவர்களின் வணக்க சொரூபங்களை சிதைத்து கடலில் போட்டது சரியென வாதிடுகிறீர்களா?

6) கடற்தொழிலையே நம்பி இருக்கும் அந்த மக்களுக்கு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாட்டை ரிஸாத் பதியுதீன் மேற்கொள்ளாதது இனவாதம் அல்லது தவறு இதில் எது சரி?

7) தேசிய நூதனசாலைக் காணியை தனது நேரடி உத்தரவில் உடனடியாகப் பெற்று உங்களைக் கோந்தைப்பிட்டியில் குடியமர்த்த முடிந்த அமைச்சருக்கு விடத்தல் தீவு மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டை உடன் ஏன் செய்யமுடியவில்லை?

8) தமிழர் அல்லாத நீதிபதி ஒருவரைக் கழுதை மற்றும் நாயின் படங்களில் அவர் பெயரைப்போட்டு அவரது பெயரைச் சொல்லி நாயே வெளியில் வா என்று கூறி நீதிமன்றத்தையும் தாக்கி இருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும்?

9) மன்னார் சம்பவம் நடைபெற்ற போது 45 நிமிடங்களுக்கு மேலாக பதியப்பட்ட வீடியோக காட்சியை தணிக்கை இன்றி முழுமையாக மக்கள் முன் ஒளிபரப்புவீர்களா?

10) மன்னாரில் நடந்த நடக்கின்ற அடாவடித் தனங்கள் குறித்து இன, மத, மொழி, மற்றும் பதவி நிலைகளின் பாதிப்பின்றிய அரசியல் தலையீடு இன்றிய, படையினரின் ஆட்சியாளரின் மிரட்டல்கள் இன்றிய ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு முடியுமா?

இதற்கு பதில் எழுதுபவர்கள் எமது மின்அஞ்சல் முகவரிக்கு தம்மை உறுதிப்படுத்தி சொந்தப் பெயரில் அனுப்பிவைத்தால் அதனை எந்த வித தணிக்கையும் இன்றி வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
radiokuru@yahoo.com



தொடர்பு பட்ட செய்தி 

ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்-

-நன்றி -http://www.globaltamilnews.net
மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் - நடராஜா குருபரன்- Reviewed by NEWMANNAR on August 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.