83 ஆவது ஆண்டில் காலடி ௭டுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை.

கடந்த எட்டு தசாப்தகாலத்திற்கும் மேலாக தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் வீரகேசரி இத்தருணத்தில் தன்னைக் கட்டிவளர்த்த வாசகர்களையும், விளம்பர தாரர்களையும் நினைவுகூருவதில் பேருவகை அடைகின்றது.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பேசும் நெஞ்சங்களின் அரசியல் மற்றும் சமூக நல அபிலாஷைகளுக்கு சளைக்காத வகையில் குரல் கொடுத்து வருவது வாசக நெஞ்சங்கள் அறிந்த விடயமாகும்.
எந்தவிதமான நெருக்கடிகள் வந்த போதிலும், நடுவுநிலையுடன் அனைத்து சமூகங்களினதும் நலன்களைப் பேணுவதிலும், அவர்களின் பிரச்சினைகளை உரிய தரப்பினருக்கு சுட்டிக்காட்டி அவற்றுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதிலும், வீரகேசரி ஒருபோதும் பின்னின்றது கிடையாது. அதன் காரணமாகவே எந்தவொரு சவாலும் இன்றி தமிழ் ஊடகத்துறையில் வீரகேசரி தலைநிமிர்ந்து நிற்கின்றது.
வீரகேசரியின் வளர்ச்சியும், அது இன்று ஆலவிருட்சம் போல் பரந்து வேரூன்றியிருப்பதும் வாசக பெருமக்களின் சலிக்காத அரவணைப்பு என்று கூறினால் அது மிகையாகாது. 1930 ஆம் ஆண்டு இதே தினம் பி. ஆர். சுப்பிரமணிய செட்டியார் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீரகேசரி முதலில் கொழும்பை மையமாகக் கொண்டே செய்திகளைப் பிரசுரித்து வந்தது. அதேவேளை புதினப்பத்திரிகையை வாசிக்கும் பழக்கம் ஒரு குறுகிய வட்டத்திடமே காணப்பட்டது. அந்த வகையில் வீரகேசரி படிப்படியாக வளர்ச்சி கண்டு நாளடைவில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தது மாத்திரமன்றி நிகரற்ற தேசிய பத்திரிகையாகவும் உருவெடுத்தது. அதன் வளர்ச்சி மெதுமெதுவாக ஆரம்பித்த போதிலும், நாட்டில் மூலை முடுக்கெங்கும் பரவி வியாபித்து இலங்கையில் அதிகம் விற்பனையாகும் முதற்தர தேசிய நாளிதழாக உருவெடுத்தது மாத்திரமன்றி இலட்சக்கணக்கான தமிழ் வாசக நெஞ்சங்களையும் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கொண்டுள்ளது. வீரகேசரி என்றால் சிங்கம் என்பதே அர்த்தமாகும். அந்தப் பெயருக்கு ஏற்றது போன்று வீரகேசரியில் தலைநிமிர்ந்து நின்று வாசகர்களின் குறைகளை முடிந்தளவு போக்கி வருகின்றது. அந்த வகையில் வீரகேசரி தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து நிற்பது மாத்திரமன்றி அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அவலங்கள் என்பவற்றை வெளிச்சம் போட்டுக்காட்டி அதற்கு நிவாரணம் தேடும் பணியிலும், தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. வீரகேசரியின் விசேட அம்சங்களில் ஒன்று இன, மத, மொழி, சார்பற்ற ரீதியில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதேயாகும்.
இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த மக்களினதும் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப சிந்தனைத் தெளிவுள்ள ஆக்கங்களைப் படைப்பதிலும், அரசியல் ரீதியாக தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்வதிலும், தீர்க்க தரிசனமான கருத்துக்களை முன்வைப்பதிலும், தன்னாலான பணியைச் சளைக்காது மேற்கொண்டு வருவது வீரகேசரி என்பது மக்களுக்குத் தெரிந்த ஒன்றாகும். இலங்கையின் தனித்துவம் மிக்க மூத்த தமிழ்ப் பத்திரிகையாக விளங்கும் வீரகேசரி அதன் சீரிய தனித்துவமான பணிகளால் தமிழ்ப் பேசும் மக்களின் மனதை வென்ற ஒன்றாகவும், விளங்கிவருகின்றது.
தமிழ் ஊடகத்துறையில் ஆல்போல் தழைத்து, உறுதியானதோர் தளத்திலிருக்கும் வீரகேசரி வாசக நெஞ்சங்களை மேலும் திருப்திபடுத்தும் வகையில் முழுக்க முழுக்க நவீன கணனி மயமான ஈடு இணையற்ற பத்திரிகையாக விளங்குவதுடன் இதர ஊடகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிவருகின்றது. இந்தளவு தூரம் இலங்கையில் தமிழ் ஊடகமொன்றின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருவது வீரகேசரியின் வாசகர்களும் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் சளைக்காத ஆதரவுமேயாகும். வீரகேசரி பத்திரிகையானது தேவையறிந்து சேவை செய்வதிலும், முதலிடத்தை வகிக்கின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் என அனைத்துப் பிராந்தியங்களுக்கும் விசேட பதிப்புக்களை நாளாந்தம் பிரசுரித்து வருகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான தினசரி பத்திரிகையாக யாழ். ஓசையையும் விசேடமாகப் பதிப்பித்து வடபகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றது. குறிப்பாக வீரகேசரி பிரசுரங்களாக, வீரகேசரி நாளிதழ், வீரகேசரி வாரவெளியீடு, விடிவெள்ளி, யாழ்.ஓசை, மெட்ரோ நியூஸ், மித்திரன், கலைக்கேசரி, சோதிடகேசரி, சூரியகாந்தி, சுகவாழ்வு, ஆசீர்வாதம், ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், ஹோம்பில்டர், பினான்ஷியல் டைஜட்ஸ், சமகாலம் ஆகிய பிரசுரங்களையும் மற்றும் வீரகேசரி இணையம் என்பவற்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.
தரமான வழியில் தெளிவான தகவல்களை வழங்குவதில் வீரகேசரி என்றுமே முன்னின்று வருவதால் அதன் செல்வாக்கு போட்டித் தன்மை அற்ற நிலைமையை உருவாக்கியுள்ளதுடன் மேலும் புதினப்பத்திரிகைத் துறை மரபில் தனக்கானதோர் தனி இடத்தைப் பதித்து பாரம்பரியத்தைப் பேணி வருகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக படித்து வேலைவாய்ப்புக்காக ஏங்கித்தவிக்கும் தமிழ்ப் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்ததோர் களமாகவும் அடித்தளமாகவும் வீரகேசரி விளங்குகின்றது. அந்தவகையில் இலங்கையில் ஊடகத்துறைகளில் பணியாற்றும் பலர் வீரகேசரி பாசறையில் பயின்றதோடு மாத்திரமன்றி தங்கள் துறையில் சிறப்பாக மிளிர்வதற்கும் வீரகேசரி காரண கர்த்தாவாக அமைந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் ஊடகத்துறையில் செல்வாக்கு மிக்கதோர் ஊடகமாக வீரகேசரியை மாற்றி அமைத்த பெருமை வாசகர்களையும், புத்திஜீவிகளையும் சார்ந்ததாகும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. அதே வகையில் வீரகேசரியும், தனது பணியைப் பக்கச் சார்பின்றித் தொடர்ந்தும் உறுதியுடன் மேற்கொள்ளும் என்பதை இத்தருணத்தில் வீரகேசரி பிரசுரங்களை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் கூறுவதில் பெருமை கொள்கின்றது. இத்தருணத்தில் வீரகேசரியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துதவும் அதன் வாசகர்கள், நலன்விரும்பிகள், புத்திஜீவிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும், நன்றிகளையும் மீண்டும் கூறிக்கொள்கின்றது. ___
-------83 ஆவது ஆண்டில் காலடி ௭டுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகைக்கு மன்னார் இணையம் சார்பாககவும் எமது வாசகர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
83 ஆவது ஆண்டில் காலடி ௭டுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை.
Reviewed by NEWMANNAR
on
August 06, 2012
Rating:

No comments:
Post a Comment