மாவீரர் தினத்துக்கு இலங்கை அனுமதி வழங்க வேண்டும்
ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணித்த போராளிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியை மாவீரர் தினமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்து வந்தனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நிகழ்வுகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது
போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் நினைவுதின நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமான நிலையில் இந்தக் கோரிக்கையை அது விடுத்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரஸல்ஸில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். போரில் பலியான விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் அனுதாப நினைவு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளுக்கு சுதந்திரம் வேண்டும். அத்துடன் இராணுவ அடக்குமுறைகள் மற்றும் காணாமல் போகச் செய்யப்படும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
மொழி உரிமைக்கு உறுதிப்பாடு அவசியம். தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியம்.
தமிழ் பேசும் மக்கள் தொழில் கல்வி உட்பட்ட விடயங்களில் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்திலும் படைகளிலும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றுள்ளது.
மாவீரர் தினத்துக்கு இலங்கை அனுமதி வழங்க வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
November 22, 2012
Rating:

No comments:
Post a Comment