போகம்பறை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் வழங்குங்கள்-சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விரைவில் விடுதலையாகும் எதிர்பார்ப்பில், அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளை வலிந்து ஏற்றுக்கொண்டு குற்றங்களுக்கான தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களுடன் சிங்களவர்களும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதால் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏறபட்டுள்ளதாகவும், அதனைத் தடுத்துநிறுத்துமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் இன்றி, நீண்டநாள் சிறைவாசம் அனுபவித்த தமிழ் அரசியல் கைதிகள் சிலர் குற்றம் செய்தவர்கள் என்று ஏற்றுக்கொண்டால் சிலவேளை விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் தற்பொழுது போகம்பறை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை நிர்வாகம், சமுதாயச் சீர்கேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சிங்களவர்களையும் இந்த தமிழ் அரசியல் கைதிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளது.
இந்த சமூகவிரோதிகள் பலமுறை தமிழ் அரசியல் கைதிகளைத் தகாதவார்த்தைகளால் தூற்றுவதுடன், தாக்குதலிலும் ஈடுபடுவதால் அவர்கள் மிகவும் அச்சவுணர்வுடன் சிறைச்சாலையில் தண்டணையை அனுபவித்து வருகின்றனர். தற்பொழுது அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தமிழ் அரசியல் கைதிகளை மெகசின் சிறைச்சாலைக்காவது அல்லது அனுராதபுரம் சிறைச்சாலைக்காவது மாற்றுமாறு என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டபோது அமைச்சர் நாட்டில் இல்லாததால் தற்பொழுது எதுவும் செய்ய முடியாதுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், உரியவர்கள் இது விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக அவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து, அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
போகம்பறை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் வழங்குங்கள்-சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 21, 2012
Rating:

No comments:
Post a Comment